இயற்கை வளத்தை பாதுகாப்போம்- பேராசிரியர்

Admin
இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி, பாக் அபுவுடன் இணைந்து மரம் நட்டார்.(உடன் டேவிட் மார்ஷெல்)

செபராங் பிறை நகராண்மைக் கழகம்(எம்.பி.எஸ்.பி) பினாங்கு இயற்கை பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து 50 மரங்கள் நட்டு “ஆர்பர் தினத்தை” (Arbor day) மிக விமரிசையாகக் கொண்டாடியது. இந்நிகழ்வு கடந்த 31/12/2016-ஆம் நாள் தாமான் கோலாம் பிரிமா பொழுது போக்கு தளத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக மாநில இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி தொடக்கி வைத்தார். நிகழ்வில் உரையாற்றிய இராமசாமி 2008-ஆம் ஆண்டு தொடங்கி பினாங்கில் ‘பசுமை பினாங்கு’ என்ற திட்டத்தை தொடங்கி பல இயற்கை வள பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து பல திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளாதாகக் கூறினார்.
மரங்கள் நடுவது சிறிய செயலாகக் காணப்பட்டாலும் மிகவும் அர்த்தமுள்ளதாகவும் இயற்கை வளமான தாவரம், ஆறு, கடல், நீர் வாழ் உயிரினங்கள் பாதுகாப்புக்கு வித்திடுவதாக மேலும் தெரிவித்தார்.
பேராசிரியர் தாமான் கோலாம் பிரிமாவில் அமைந்துள்ள பொழுது போக்கு தளத்திற்கு ” பாக் அபு பொழுது போக்கு தளம்” என பெயர் சூட்ட செபராங் பிறை நகராண்மைக் கழகத்திற்குப் பரிந்துரைப்பதாகக் கூறினார். பாக் அபு என்ற தனிநபர் அந்த பொழுது போக்கு தளத்தின் தூய்மையும் இயற்கை வள பாதுக்காப்பிற்கும் வழங்கிய நல் ஆதரவுக்கு அங்கீகரிக்கும் வகையில் இப்பரிந்துரைச் செய்வதாகத் தெரிவித்தார்.
நிகழ்வில் எம்.பி.எஸ்.பி காட்சியமைப்பு துணை இயக்குநர் சித்தி பாத்திமா இஸ்மாயில், சமூக பாதுகாப்பு & முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு துரைசிங்கம், நகராண்மைக் கழக உறுப்பினர்களான திரு சத்திஸ் மற்றும் டேவிட் மார்ஷெல் கலந்து கொண்டனர்.
பொது மக்களிடையே இயற்கை வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மரங்கள் நட்டு அடுத்த தலைமுறைக்கு பசுமையான இயற்கையை வளத்தையும் மேம்படுத்தவே அனைத்துலக ரீதியில் “ஆர்பர் தினம்” கொண்டாடப்படுகிறது.