ஐலன் கிலேட்ஸ் விளையாட்டு மைதானம் மறுசீரமைக்கப்பட்டது.

புக்கிட் குளுகோர் பகுதியில் அமைந்துள்ள ஐலன் கிலேட்ஸ் விளையாட்டு மைதானம் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக பொதுமக்களின் நலனுக்காகத் திறப்பு விழாக்கண்டது. இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் உள்ளூர் அரசு, வெள்ள நிவாரண மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் அவர்களுடன் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் மற்றும் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு.நேதாஜி இராயர் கலந்து கொண்டனர்.

படம் 1:  ஐலன் கிலேட்ஸ் விளையாட்டு மைதானத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். (உடன் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் மற்றும் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு.நேதாஜி இராயர்)
படம் 1: ஐலன் கிலேட்ஸ் விளையாட்டு மைதானத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். (உடன் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் மற்றும் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு.நேதாஜி இராயர்)

இந்த விளையாட்டு மைதானம் பினாங்கு மாநில நகராண்மைக் கழகத்தின் முயற்சியில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இந்த தளத்தில் புதிய நடைப்பாதை மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பினாங்கு மாநிலத்தின் தூய்மை, பசுமை, பாதுகாப்பு, சுகாதாரம் என்ற கோட்பாட்டுக்கு ஏற்ப இந்த மைதானத்தைச் சுற்றிலும் மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டுள்ளன என தமது உரையில் குறிப்பிட்டார் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால். மேலும் பொது மக்கள் உடற்பயிற்சி கொள்கையை மேம்படுத்தவும் இத்திட்டம் சீரமைப்புக் கண்டுள்ளது என்றார். அதோடு பொதுமக்களுக்குச் சுகாதாரமான சூழ்நிலையை அமைத்து கொடுப்பது மிக முக்கிய அம்சமாக இத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டது.

தொடர்ந்து, நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு.நேதாஜி இராயர் அவர்கள் ஐலன் கிலேட்ஸ் விளையாட்டு மைதானம் ரிம100,000 செலவில் உருவாக்கப்பட்டது என்றார். எனவே, பொதுமக்கள் விளையாட்டு உபகரணங்களைப் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தற்போது இருக்கும் சூழ்நிலையில் நோயற்ற வாழ்க்கையை மேற்கொள்ள அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதோடு, குடும்பத்தினருடன் மதிய பொழுதை மகிழ்வுடன் கழிக்க இவ்விளையாட்டு மைதானம் பயன்படுத்தலாம் என்றார்.

படம் 2: சீரமைக்கப்பட்ட ஐலன் கிலேட்ஸ் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி செய்யும் பொது மக்கள்
படம் 2: சீரமைக்கப்பட்ட ஐலன் கிலேட்ஸ் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி செய்யும் பொது மக்கள்