சட்டமன்றத்தின் மாண்பு நிலைநிறுத்த புதிய தீர்மானம்- முதல்வர்

Admin
இரண்டாம் தவணைக்கான முதல் சட்டமன்றக் கூட்டம்
இரண்டாம் தவணைக்கான முதல் சட்டமன்றக் கூட்டம்

கடந்த மே மாதம் 19-ஆம் திகதி பினாங்கு மாநில இரண்டாம்  தவணைக்கான முதல் சட்டமன்ற கூட்டம் இனிதே தொடங்கியது. காவல் துறையின் அணிவகுப்பைப் பார்வையிட்டப் பின் மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் அப்துல் ரஹ்மான் ஹஜி அபாசின் அவர்கள் சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ உரையாற்றினார். மாநில ஆளுநர் பினாங்கு வாழ் மக்கள் நீர் பயன்பாட்டில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு எல்-நினோ என்ற வறட்சி காலத்தில் நீர் பங்கீட்டு முறையினைத் தவித்து சிறப்புடன் வாழ்வோம் என்று சூளுரைத்தார்.

மாநில சட்டமன்றத்தின் செயலாளரான மகேஸ்வரி மலையாண்டி, கூட்டத்தை முறையாக வழி நடத்த மாநில முதல்வர் லிம்  குவான் எங் முன்மொழிந்ததைத் தொடர்ந்து சட்டமன்றம் சபாநாயகர் வழிகாட்டலுடன் தொடக்க விழாக்கண்டது. 30 மக்கள் கூட்டணி உறுப்பினர்களின் தலைவராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும்  10 தேசிய முன்னணி உறுப்பினர்களின் எதிர்க்கட்சி தலைவராக ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் சித்தி சஹாரா அமீட் ஆகியோர் சட்டமன்றத்தில் சிறப்பிடம்  வகித்தனர்.

19-ஆம் தொடக்கி 23-ஆம் வரை ஐந்து நாட்களுக்கு நடைபெற்ற  சட்டமன்ற கூட்டத்தொடரில் பல விவாதங்கள் செய்யப்பட்டு பல புதிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சட்டமன்ற கூட்டத்தொடரில் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு நேதாஜி இராயர் உதிர்த்த சில விவாதத்தால் எதிர்க்கட்சித் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்க சபாநாயகரும் கண்டனம் தெரிவித்தார். இந்த விவாதத்தில் அம்னோ இளைஞர் பிரிவினர் கொந்தளிப்படைய சட்டமன்றத்தில் அத்துமீறி நுழைந்து பினாங்கில் பரபரப்பை ஏற்படுத்தினர். அன்றைய தினம் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயரைக் குறிவைத்து அம்னோ இளைஞர் பிரிவினர் பலர் சட்டமன்றத்தில் அனுமதியின்றி நுழைந்ததோடு சபாநாயகரின்  மேசையில் ஏறவும் ஒருவர் முயன்றார். மேலும், அம்மறியலில் தேசியக் கொடி மற்றும் பினாங்கு மாநில கொடியும் கீழே விழச்செய்தனர். அதுமட்டுமின்றி மாநில முதல்வர், சட்டமன்ற உறுப்பினர், ஐசெக, பினாங்கு நீர் விநியோக நிறுவனம் ஆகியோரை அவமத்திக்கும் வகையில் பல தகாத வார்த்தைகளை முட்டையில் எழுதி சட்டமன்ற பிரதான நிழைவாயில் உடைத்து ஆர்பாட்டம் செய்தனர். அம்னோ இளைஞர் பிரிவினர் செய்த ஆர்பாட்டத்தால் சட்டமன்ற கூட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது.

பினாங்கு சட்டமன்றத்தில் அத்துமீறி நுழைந்து ஆர்பாட்டம் செய்த  அம்னோ இளைஞர் பிரிவினர்
பினாங்கு சட்டமன்றத்தில் அத்துமீறி நுழைந்து ஆர்பாட்டம் செய்த அம்னோ இளைஞர் பிரிவினர்

அம்னோ இளைஞர் பிரிவினரின் இந்தத் தகாத செயலைக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநில முதல்வரின் தலைமையில்விதிமுறை 30(iiiv) அடிப்படையில்  புதிய தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தீர்மானத்தில் சட்டமன்றத்தில் அத்துமீறி நுழைந்த அம்னோ இளைஞர் பிரிவினரை உடனடியாகக் கைதுச் செய்து நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறினார் மாநில முதல்வர். இதன் மூலம், சட்டமன்றத்தின் மாண்பினை நிலைநிறுத்தப்படுவதோடு  இந்த மூரடன்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்றார். அம்னோ இளைஞர் பிரிவினரின் செயலைத் தவறு என ஒப்புதல் வழங்கிய தேசிய முன்னணியைச் சார்ந்த எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்தில் மன்னிப்புக் கேட்டனர். இருப்பினும் மாநில முதல்வரின் இத்தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்தனர்.

சட்டமன்றத்தில் மாநில முதல்வர் IKEA நிறுவனம் பத்து காவான் தொழிற்பேட்டையில் முதலீடு செய்வதால் பினாங்கு மாநிலத்தில் பொருளாதாரம் மேன்மையடையும்; மாநிலத்தில் நீர் கட்டணம் உயர்த்தப்படுவதால் நீர் பங்கீட்டு முறையைத் தவிர்க்கலாம்; திரையுலகத் துறையைப் புதுப்பிக்க Penang Global Tourism (PGT) நிறுவனத்தை  ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுத்தல்; விதிமுறை 30(iiiv) கீழ்ப் புதிய தீர்மானம் ஆகியவை தமது தொகுப்புரையில் சுட்டிக்காட்டினார்.

 

அதிகரித்து வரும் செலவினங்களைச் சமாளிக்க பொது மக்களுக்கு அடிப்படைச் சம்பளத்தை ரிம1,100-ஆக உயர்த்த வேண்டும் என சட்டமன்றத்தில் மாநில இரண்டாம் துணை முதல்வர் மதிப்பிற்குரிய பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் கேட்டுக்கொண்டார். மேலும் நமது நாட்டில் பல மொழி இடைநிலைப்பள்ளிகள் அமைந்திருக்கும் வேளையில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கு மட்டும் மத்திய அரசாங்கம் முடக்கம் தெரிவிப்பதற்கானக் காரணம் புரியவில்லை என்றார்.

குறைந்த, நடுத்தர மலிவுவிலை வீடுகள் பெறுநரின் விவகாரத்தில் எவ்வித தவறுதலும் ஏற்படுவதைத் தவிக்கும் பொருட்டு  கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய

திரு ஜெக்டிப் சிங் டியோ தலைமையில் தேர்வு செயல்முறை விரிவாக்கக் குழு அமைக்கப்பட்டு தகுதிப்பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என எதிர்கட்சியினரின் கேள்விக்குப் பதிலடிக் கொடுத்தார்.

19/5/2014 முதல் 23/5/2014-ஆம் நாள் வரை நடைபெற்ற இரண்டாம் தவணைக்கானச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்ட மன்ற உறுப்பினர்கள் மக்களின் நலன் கருதி பல துறைகளில் குறிப்பாகப் பொருளாதார, வீடமைப்புத் திட்டம், சுகாதாரம், சுற்றுச்சூழல்  அடிப்படையில் பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டன.