பாகான் பகுதி வெள்ள நிவாரணப் பிரச்சனைத் தீர்வுக் காணப்பட்டது.

சீரமைக்கப்பட்ட பாகான் வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தைப் பார்வையிடுகிறார்  மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
சீரமைக்கப்பட்ட பாகான் வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தைப் பார்வையிடுகிறார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

செபராங் பிறை நகராண்மைக் கழகத்தின் முயற்சியில் தாமான் பாகான் மற்றும் தாமான் சந்தேக் சாலைகளில் வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டம் நிறைவுப் பெற்றது. இந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில முதல்வர் இம்மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரிம354,000 செலவிடப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார். வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காகத் திறந்த குத்தகை முறையில் எம்.எஸ்.எ வென்சேர் மற்றும் ஜே.பி.என்.எஸ் தனியார் நிறுவனமும் (MSA Venture & JPNS Sdn. Bhd) தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த ஜுன் 15-ஆம் திகதி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டத்தில் வெள்ள நிவாரண பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் பொருட்டு பெரிய சாக்கடைகள் நிறுவுதல், சாலை பராமரிப்பு, புதிய பாதசாரி நடைப்பாதை நிர்மாணிப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளதாகச் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர்.
பாகான் வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 2000 குடும்பங்கள் வெள்ள பிரச்சனையிலிருந்து விடுப்பட்டு மகிழ்ச்சியானச் சூழலில் தங்களின் அன்றாட வாழ்க்கையை வாழ முடியும் என்றார் மாநில முதல்வர். மேலும், 2015-ஆம் ஆண்டு பினாங்கு மாநில தீவு மற்றும் செபராங் பிறை முழுவதும் வெள்ள நிவாரணப் பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் வகையில் ரிம48 கோடி மாநில அரசு ஒதுக்கியுள்ளது என்றார். இத்திட்டங்களின் மூலம் வெள்ள நிவாரண பிரச்சனைக்குத் தீர்வுக்காண முடியும் என நம்பிக்கை தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
இந்நிகழ்வில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தனசேகரன், பொதுப்பணி, போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வசதி ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் ஹோக் சேங் உடன் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.