பினாங்கில் இலவச எந்திர மனித உருமாற்றக் கண்காட்சி

கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மனித உருமாற்ற எந்திரங்கள்.
கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மனித உருமாற்ற எந்திரங்கள்.

பினாங்கு மாநிலத்தில் எந்திர மனித உருமாற்றக் கண்காட்சி (Transformers Exibihition) ஜுலை 10 ஆம் நாள் தொடங்கி 17 செப்டம்பர் 2015 வரை இரு மாதங்களுக்கு நடத்தப்படுகிறது. நோன்புப் பெருநாள், சுதந்திர தினம் மற்றும் மலேசிய தினம் ஆகிய பொது விடுமுறைகளில் பினாங்கு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த கண்காட்சியை நடத்துவதாக பாடாங் கோத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

2015-ஆம் ஆண்டை பினாங்கு மாநிலத்திற்கு வருகையளிக்கும் ஆண்டாக பிரகடணப்படுத்தப்பட்டிருப்பதால், இந்த எந்திர மனித உருமாற்றக் கண்காட்சி திரளான சுற்றுப்பயணிகளை வெகுவாக ஈர்ப்பது திண்ணமென்று தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார் முதல்வர். திங்கள் முதல் வெள்ளி வரை நண்பகல் 12 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறுமென்றும் பொது விடுமுறை காலங்களில் காலை 9 மணி முதல் பின்னிரவு 12 மணி வரை கூடுதல் நேரத்திற்கு பொதுமக்கள் இலவசமாக இக்கண்காட்சியை கண்டு களிக்கலாம்.

எந்திர மனித உருமாற்றத்தில் நிகழும் அற்புதங்களையும் அதிசயங்களையும் அனைத்து தரப்பினரும் கண்டு களிப்பது அவசியம் எனவும் நவீனமயமும் புதுமையும் நிறைந்த எந்திர உருமாற்ற மனிதர்களின் பற்பல சாகசங்களை காண்பதற்கும் இரசிப்பதற்கும் பொது மக்களுக்காக பினாங்கு அரசு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது பாராட்டக்குறியதாகும். நாட்டில் பொருள் சேவை வரி அமலாக்கத்தின் எதிரொலியால் மக்கள் நிதிச் சுமையில் மன சஞ்சலத்தில் மூழ்கியிருப்பதைக் கருத்தில் கொண்டு மக்கள் குதூகலம் பெறுவதற்கு ஏதுவாக அரசு இதுவரையில் வேறேங்கும் நிகழ்ந்திராத இக்கண்காட்சியை இலவசமாக ஏற்பாடுச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, பொதுமக்கள் திரளாக ‘ Optimus Prime & Bumblebee’ எனும் மனித உருமாற்ற எந்திரங்களை காண அழைக்கப்படுகின்றனர்.