பினாங்கு கடற்கரை விளையாட்டுக் கார்னிவல் 2013

பினாங்கு மாநில விளையாட்டுக் குழு, இளைஞர் & விளையாட்டு அணி மற்றும் பினாங்கு மாநில நகராண்மைக் கழகமும் இணைந்து  பினாங்கு கடற்கரை விளையாட்டுக் கார்னிவல் 2013 (Penang Beach Sports Carnival 2013) இனிதே நடத்தியது. இக்கார்னிவல் கடந்த 22 டிசம்பர் 2013-ஆம் நாள் பத்து பிரிங்கி கோல்டன் சென்ட் ஓய்வகத்தில் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டி கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கி ஐந்தாவது ஆண்டாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார் இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினரும், பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினருமான சோங் எங் அவர்கள்.

பினாங்கு கடற்கரை விளையாட்டுக் கார்னிவல் 2013 ஏற்பாட்டுக் குழுவினர், ஆதரவாளர் மற்றும் இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் சோங் எங்
பினாங்கு கடற்கரை விளையாட்டுக் கார்னிவல் 2013 ஏற்பாட்டுக் குழுவினர், ஆதரவாளர் மற்றும் இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் சோங் எங்

காலை மணி 8.00-க்குத் தொடங்கி மதியம் 1.00 மணி வரை இப்போட்டி நடைபெற்றது. இதில் வேடிக்கை மீன்பிடி போட்டி, கடற்கரை கைப்பந்து போட்டி, கடற்கரை ஃபுட்சால் போட்டி, கடற்கரை கபடி போட்டி, mr.beach கார்னிவல் போட்டி, நீர்மிதவை போட்டி, பட்டம் விடும் போட்டி, கடற்கரை மரப்பந்து போட்டி, வேகம் பூப்பந்து ஆர்ப்பாட்டம் போன்ற அங்கங்கள் இடம் பெற்றன. இப்போட்டியில் 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவுகளை வழங்கினர்.

 

இந்நிகழ்வில் வரவேற்பு உரையாற்றிய ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் அவர்கள் இந்நிகழ்வை வெற்றியடையச் செய்த அனைத்து தரப்பினர்களின் சேவையைப் பாராட்டி தமது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். அதோடு, பினாங்கு கடற்கரை விளையாட்டுக் கார்னிவல் 2013 ஆதரவாளர்களான குளிர்பானம் (100plus),  சன்குயிக்,  பத்து பிரிங்கி கோல்டன் சென்ட் ஓய்வகம், குவான் மிங் தினசரி நாளிதழ் என்ற அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். இதனிடையே, கடற்கரை பகுதியில் பணிபுரிபவர்களுக்கு விரைவில் பட்டறைகள் நடத்த பினாங்கு மாநில அரசு இலக்கு கொண்டுள்ளதாக மேலும் கூறினார்