பினாங்கு கேபள் கார் திட்டம் துவங்கப்படவுள்ளது.

படம் 1: புதிய கேபள் கார் திட்டத்தை செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம்  குவான் எங்.
படம் 1: புதிய கேபள் கார் திட்டத்தை செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

பினாங்கு மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் முயற்சியில் பல அரிய பொது போக்குவரத்து திட்டங்கள் அமல்படுத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. பினாங்கு செண்ட்ரல் மற்றும் மாநில அரசின் மற்றொரு புதிய முயற்சியில் பட்டர்வொர்த் பினாங்கு செண்ட்ரலையும் பினாங்குத் தீவிலுள்ள கேட் லெபோ நோர்டினையும் இணைக்கும் 3கிலோ மீட்டர் தூரத்திற்கு கேபள் கார் திட்டம் நிறுவப்படவுள்ளதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் இத்திட்டம் 2018-ஆம் ஆண்டு முழுமையாக நிறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார். இத்திட்டத்தின் வழி, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதோடு பினாங்கு சுற்றுலாத் துறையையும் மேம்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். ஒரு கேபள் காரில் 10 பேர் வீதம் 80 கார்களில் ஒரு மணி நேரத்தில் 2000 பயணிகள் பயணிக்கும் நவீன வசதியுடன் இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. 15 நிமிடத்தில் பெருநிலத்திலிருந்து தீவுப் பகுதியை வந்தடைய முடியும் சாத்தியமும் அதே வேளையில் இயற்கை அழகைக் கண்டு வியக்கும் வாய்ப்பும் இத்திட்டத்தில் உள்ளது என்றார்.

தற்போது கேபள் கார் திட்டத்திற்கானத் குத்தகையாளர்கள் நியமிக்கப்படவில்லை என உள்ளூர் அரசு, வெள்ள நிவாரணம் மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் தெரிவித்தார். இன்னும் நான்கு மாதக்காலத்தில் சிறந்த குத்தகையாளரை தேர்வுச்செய்து இவ்வாண்டு இறுதியில் கேபள் கார் திட்டத் தொடக்க வேலைகள் ஆரம்பமாகும் என மேலும் தெளிவுப்படுத்தினார். இதனிடையே, பெருநிலத்தையும் தீவுப்பகுதியையும் இணைக்கும் மற்றொரு அரிய திட்டம் என வர்ணித்தார். இந்நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் ஹொக் சேங், பினாங்கு நகர் கழகத்தின் பொறியியல் துணை இயக்குநர் இராஜேந்திரன், மாநில நிதித்துறை அதிகாரி டத்தோ மோக்தார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.