பினாங்கு மாநில அரசின் தமிழ்ப்பள்ளி சிறப்பு நிதி ஒதுக்கீடு

படம் 1  மாநில அரசியல் உயர்மட்டத் தலைவர்கள் கையில் மாதிரி காசோலையுடன் காட்சியளிக்கின்றனர். உடன் சிறப்புப் பிரமுகர்கள் மற்றும் பினாங்கு தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்கள்
படம் 1
மாநில அரசியல் உயர்மட்டத் தலைவர்கள் கையில் மாதிரி காசோலையுடன் காட்சியளிக்கின்றனர். உடன் சிறப்புப் பிரமுகர்கள் மற்றும் பினாங்கு தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்கள்

2009-ஆம் ஆண்டு தொடங்கி பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தொடர்ந்து ஏழாவது முறையாக பினாங்கில் அமையப்பெற்றுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் ரிம1.75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளித்தது. இந்நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 20-ஆம் திகதி கொம்தார் ஏ அரங்கத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உந்து சக்தியாகத் மக்கள் கூட்டணி அரசு திகழ்கிறது. மக்கள் கூட்டணி அரசு பினாங்கு மாநில ஆட்சிப்பீடத்தில் அமரும் வரை தமிழ்ப்பள்ளி மற்றும் பாலர்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படும் என உறுதியளித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். மாநில அரசு வழங்கும் நிதி ஒதுக்கீட்டை சிறந்த முறையில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்தி தமிழ்ப்பள்ளியின் பொது வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது சாலச்சிறந்தது. –
2009-ஆம் ஆண்டு 1.5 மில்லியன் மானியம் வழங்கிய மக்கள் கூட்டணி அரசு 2010-ஆம் தொடங்கி தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக 1.75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி, தமிழ்ப்பள்ளிகளில் இயங்கி வரும் பாலர்ப்பள்ளிகளையும் மாநில அரசு தற்காத்து வருகிறது. தமிழ்ப்பள்ளி பாடத்திட்டத்தையும் அதன் நிர்வாகத்தையும் குறைக்கூறும் சில தரப்பினருக்கு அரசியலமைப்பு சட்டத்திட்டப்படி இந்நாட்டில் தமிழ்ப்பள்ளி மற்றும் சீனப்பள்ளி இயங்குவதற்கு முழு சுதந்திரம் உண்டு எனச் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர். பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் அடிப்படை வசதிகளைக்கூட சரிவர பெற்றிடாமல் கவலைக்கிடமானச் சூழ்நிலையில் செயற்பட்டுக் கொண்டிருந்தது வெள்ளிடைமலையாகும். ஆனால், மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்ப்பள்ளிகளின் சோதனைகளும் வேதனைகளும் மாநில அரசின் அக்கறையினாலும் ஈடுபாட்டாலும் சூரியனைக் கண்ட பனி போல ஒவ்வொன்றாக விலகி வருகிறது என்றால் மிகையாகாது. பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் உயர உயர மாணவர்களின் கல்வித் தரமும் வானுயரும் என்பது உண்மையே.
மாநில அரசு பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிக்க நில வழங்க முன் வந்தும் கூட்டரசு அரசு அனுமதி வழங்காததை எண்ணி வருத்தம் கொள்வதாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். மாநில அரசு மீண்டும் தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிக்கும் பொருட்டு துணை பிரதமரிடம் மேல் முறையீடு செய்ததாகக் கூறினார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் வழங்கும் இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங், பேராசிரியர் ப இராமசாமி உட்பட பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெயபாலன், தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் கண்காணிப்புக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் கே.அன்பழகன், வழக்கறிஞர் திருமதி மங்களேசுவரி, பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு சாரா பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 }