பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை உயர்ந்துள்ளது.

பினாங்கு மாநிலத்தில் இருக்கும் 28 தமிழ்ப்பள்ளிகளின் ஒட்டுமொத்த அடைவுநிலை உயர்ந்துள்ளது என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள். எனினும், அனைத்து பாடங்களிலும் “A” பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நாம் அனைத்து பாடங்களின் அடைவுநிலையை ஒப்பிடுவதை விடுத்து ஒட்டுமொத்தமாக அனைத்து பாடங்களிலும் சிறப்பு தேர்ச்சியின் அடைவுநிலையே முக்கியம் என தெளிவுப்படுத்தினார் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு அதிகாரி டத்தோ அன்பழகன் அவர்கள்.

pix

இவ்வாண்டு தேசிய அளவில் யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை சரிவுக்கண்டதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் அடங்கியுள்ளன. அதற்கு முதல் காரணம், யூ.பி.எஸ்.ஆர் தேர்வுதாள் கசிவுதான் என தெளிவுப்படுத்தினார் இரண்டாம் துணை முதல்வர். அதாவது, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ்மொழி கட்டுரை தேர்வுத்தாள் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அப்பாடம் வேறொரு நாளில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, இந்நிலை தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது. திடீரென்று தேர்வுத்தாள் மாற்றப்பட்டதால் அவர்கள் மனவுலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மற்றொரு காராணம், சில பொறுப்பற்ற தலைவர்கள் தாய்மொழிப்பள்ளியை மூட வேண்டும் எனக் கங்கணம் கட்டி கொண்டுள்ளனர். அவர்களின் விவாதம் தமிழ்ப்பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிரட்டல்கள் தரக்கூடும். இவ்விவாதங்களை உடனடியாக நிறுத்திவிடும்படி கட்டளையிட்டார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள். மேலும், பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு மாநில மக்கள் கூட்டணி அரசு தமது உதவிகளைத் தொடர்ந்து வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.