பினாங்கு வருகை ஆண்டு “2015”

Admin

pix 1.மலேசியாவில் குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் மூன்று தலைமுறையாகப் பல இன மக்கள் வாழ்ந்து வருவது அதன் தனித்துவத்தை நிர்வகிக்கிறது. பல இன மக்களின் எண்ணற்ற சுவைகளானது பினாங்கு மாநிலம் உலகின் சிறந்த உணவு நகரமாகத் திகழச் செய்கிறது. பல இன மக்களின் வருகை பல கலாச்சாரம் மற்றும் மதத்தைப் பிரதிபலிக்கிறது. எனவே, பினாங்கு மாநிலத்தில் வருட முழுவதும் வண்ணமயமான விழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது என்பது வெள்ளிடைமலையே.
வருகின்ற 2015-ஆம் ஆண்டு பினாங்கிற்கு வருகை புரியும் வருடமாக அங்கிகரிக்கப்படுகிறது என்றார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
பொதுவாகவே, ஒவ்வொரு வருடம் சீனப் புத்தாண்டு நடைபெறும் பொழுது பினாங்கு தெருக்களில் சிங்கம் நடனம் நடைபெறும்; நோன்புப் பெருநாள் காலங்களில் பரிமாரப்படும் “கெத்துபாட்” பலகாரம்; தைப்பூசத் திருவிழாவின் போது பக்தர்கள் உடல் பாகங்களில் வேண்டுதலுக்கு இணங்க குத்திக்கொள்ளுதல் ஆகிய விழாக்களின் கொண்டாடத்தைச் சுற்றுப்பயணிகள் நன்கு அறிவர். மேலும் பொங்கல் கொண்டாட்டம் சுற்றுப்பயணிகளை வெகுவாகக் கவரும். ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஜொர்ச்டவுன் பாரம்பரிய விழா மற்றும் டிசம்பர் மாதம் இடம்பெறும் “ஜாஸ் தீவு விழா” உலக சுற்றுப்பயணிகள் பினாங்கிற்கு வருகையளிப்பதற்கு முக்கிய காரணியாக விளங்குகிறது.
வருட முழுவதும் முடிவின்றி நடைபெறும் விழாக்கள் மற்றும் பண்டிகைகள் காண்பதற்கே பினாங்கிற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் புற்றீசல் போல் வருகையளிக்கின்றனர் என அகம் மகிழத் தெரிவித்தார் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல்வர். இதன் வழி பினாங்கு மாநிலத்தின் சுற்றுலாத்துறை மேன்மை காண்பதோடு பொருளாதாரமும் உயர்வடைகிறது என்றார். பிப்ரவரி மாதம் நடைபெறும் தைப்பூசத் திருவிழா, வெப்பக் காற்று பலூன் திருவிழா, சீனப்புத்தாண்டு கொண்டாட்டம், திரோப்சிட் திருவிழா ஆகியவை பினாங்கு மாநிலத்தில் இடம்பெறும் விழாக்களின் கொண்டாட்டத்தைக் குறிப்பிடுகிறது.
ஆகவே, பினாங்கு மாநிலத்தில ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை விழாக்கள் இடம்பெறும் என்பதற்காகவே ” பினாங்கு விழாக்களுக்கு முடிவற்றது” என்ற கருப்பொருளுடன் சுற்றுப்பயணிகள் அழைக்கப்படுகின்றனர். மேல் விபரங்களுக்கு mypenang.gov.my/vpy எனும் இணையத்தளத்தை வலம் வரலாம்.