பெர்டா சிட்டி பேரங்காடி அடைத்ததற்கு அசெனியா நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் – முதல்வர்.

பெர்டா சிட்டி பேரங்காடியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்
பெர்டா சிட்டி பேரங்காடியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்

அண்மையில் தெலோக் ஆயிர் தாவார் தொகுதியில் அமைந்துள்ள பெர்டா சிட்டி பேரங்காடி அசெனியா குழு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இப்பேரங்காடி அண்மையில் அந்த நிர்வாகத்தினரால் ஒரு நாள் நோட்டிஸ் உடன் நிரந்தரமாக மூடப்பட்ட தகவல் மிக பரபரப்பாக பினாங்கு வாழ் மக்களிடையே பேசப்படுகிறது. இதில் வேலை செய்த நூற்றுக்கும் மேற்பட்டோர், சிறுகடை உரிமையாளர்களின் நிலையை நேரில் சென்று பார்வையிட்டார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
பெர்டா சிட்டி பேரங்காடி அடைத்ததற்கு அசெனியா தனியார் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, இப்பேரங்காடி பினாங்கு மாநில முக்கிய அம்னோ தலைவர் ஒருவருக்கு சொந்தமானது என தாம் நம்புவதாகக் கூறினார். பெர்டா சிட்டி பேரங்காடி மூடப்பட்டதன் காரணத்தை விரைவில் ஊடங்களுக்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் வெளியிட வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார்.
இப்பேரங்காடி மூடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு காற்று பதனாக்கம் அமைப்பில் கோளாறுகள் இருந்ததாக நம்பப்படுகிறது. காற்று பதனாக்கம் அமைப்பு மைய அளவில் செயல்படும் வேளையில் இம்மாதிரியான கோளாறுகள் ஏற்பட சாத்தியமில்லை என அவர் கருத்துரைத்தார். பெர்டா சிட்டி பேரங்காடி நிறுவனம் சம்மந்தப்பட்ட குத்தகையாளர்களுக்கு காற்று பதனாக்கம் அமைப்புக்கான கட்டணம் செலுத்தாமல் இருப்பதே இப்பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமையும் என சந்தேகிக்கப்படுகிறது. இப்பிரச்சனை தொடர்பில் செபராங் பிறை நகராண்மை கழகம் மேல் விசாரணை நடத்த கட்டளையிடப்பட்டது.}