மஜிஸ்திக் ஹைட்ஸ் வீடமைப்புத் திட்டம் நிறைவடைந்தது.

புதுப்பொழிவுடன் காட்சியளிக்கும் மஜிஸ்திக் ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு

1995-ஆம் ஆண்டு பொறுப்பற்ற மேம்பாட்டாளரால் கைவிடப்பட்ட மஜிஸ்திக் ஹைட்ஸ் வீடமைப்புத் திட்டம் மாநில அரசின் முயற்சியில் மீண்டும் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டு அதன் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பாயா தெருபோங்கில் அமைந்துள்ள மஜிஸ்திக் ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் மேம்பாட்டுப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அறிவித்தார்.
திறந்த குத்தகை முறையில் மாநில அரசு பி.எல்.பீ லெண்ட் தனியார் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. மாநில அரசு தன்னால் இயன்ற உதவிகளை கொடுக்க எப்பொழுதும் முற்படும். மஜிஸ்திக் ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்புக்கான ஆவணங்கள் அனைத்தும் குறிப்பிட்ட தரப்பினரிடம் வழங்கப்பட்டு விட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப். விரைவில் கொண்டாடப்படவிருக்கும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உரிமையாளர்கள் தத்தம் வீட்டின் சாவியைப் பெற்றுக்கொள்ளலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

மஜிஸ்திக் ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 370 பேர் வீடுகளை வாங்கியிருந்தனர். இவர்கள் 1995-ஆம் ஆண்டு விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் (sales and purchase agreement) கையெழுத்திட்டனர். இவர்களை மாநில அரசு அடையாளங்கண்டு வீடுகளை ஒப்படைக்க முற்பட்ட செயல் பாராட்டக்குரியதாகும்.
தொடர்ந்து இன்னும் பினாங்கு மாநிலத்தில் மெங்குவாங் ஹைட்ஸ் வீடமைப்புத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் நேரடி பார்வையில் உள்ளதாகவும் கூடிய விரைவில் இத்திட்டம் இவ்வாண்டுக்குள் நிறைவடையும் என தாம் நம்புவதாக விவரித்தார் திரு.ஜெக்டிப். பினாங்கு மாநிலத்தில் இனிமேலும் வீடமைப்புத் திட்டங்கள் கைவிடப்படாமல் இருப்பதை மாநில அரசு உறுதிச்செய்யும். மஜிஸ்திக் ஹைட்ஸ் மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் இயோ சூன் இன் உடன் கலந்து கொண்டார்.