மாநில அரசு தமிழ் பாலர்ப்பள்ளிகளுக்கு ரிம 50000 மானியம் வழங்கியது

நம் இந்திய மாணவர்கள் சிறந்த முறையில் கல்வியைக் கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு தமிழ்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து பல சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது. அவ்வகையில் கடந்த அக்டோபர் 11-ஆம் திகதி மாநில அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பினாங்கின் தமிழ் பாலர்ப்பள்ளிகளுக்கு ரிம50000 மானியத்தைப் பகிர்ந்தளித்ததை நாம் அறிவோம். இந்நிகழ்வு பினாங்கு மாநில இந்து அறவாரிய மண்டபத்தில்  இனிதே நடைபெற்றது.

பினாங்கு மாநிலத்தில் இடப்பெற்றிருக்கும் 22 தமிழ்ப்பள்ளிகளில் 7 பள்ளிகளில் மட்டுமே மத்திய அரசின் முழுவுதவிப் பெற்று பாலர்ப்பள்ளி வழிநடத்தப்படுகிறது. மற்ற தமிழ்ப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆதரவில் நிர்வகிக்கப்படுகிறது. எனவே பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சுமையைக் குறைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரிம100000-ஐ மானியமாக வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது. கடந்த மார்ச் 21-ஆம் திகதி முதல் கட்டமாக ரிம50000-ஐ அனைத்து தமிழ்ப்பள்ளி பாலர்ப்பள்ளிகளுக்கும் மானியமாக வழங்கப்பட்டது. இம்மானியம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை என இரண்டு தவணையாக வழங்கப்படும்.

மாநில முதல்வர் முன்னிலையில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் பாலர்பள்ளி நிர்வாகப் பிரதிநிதியிடம் காசோலை வழங்கினார்
மாநில முதல்வர் முன்னிலையில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் பாலர்பள்ளி நிர்வாகப் பிரதிநிதியிடம் காசோலை வழங்கினார்

இந்திய மாணவர்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்குவதற்குப் பாலர்ப்பள்ளி அடிப்படையாக அமைவதாகவும் அதனை வழிநடத்துவதற்கு மக்கள் கூட்டணி அரசு தூண்டுகோளாக இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். கடந்த ஆண்டு முதல் இந்த நிதியுதவி பாலர்ப்பள்ளிகளுக்கு வழங்குவதைக் கூறினார். கடந்த ஆண்டு  அக்டோபர் மாதம் 16 பாலர்ப்பள்ளிகளுக்கும் ரிம50,000 மானியம் வழங்கியது வெள்ளிடைமலையாகும்.

பினாங்கின் அனைத்துத் தமிழ் பாலர்ப்பள்ளிகளிலும் நல்லதொரு கற்றல் கற்பித்தல் சூழல் உருவாக்க  வேண்டும் என்ற உன்னத நோக்கில் வழங்கப்படும் இந்த மானியம் மிகவும் பாராட்டுக்குரியதாகும் என்று பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் தம் சிறப்புரையில் வலியுறுத்தினார்.

இம்மானியம் வழங்கும் நிகழ்ச்சியில் பினாங்கு முதல்வர், இரண்டாம் துணை முதல்வர் உட்பட, சட்டமன்ற உறுப்பினர்களான, திரு ஜெயபாலன், திரு தனசேகரன், டத்தோ அப்துல் மாலிக்,  மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு அதிகாரி டத்தோ டாக்டர் அன்பழகன், திரு அருணாச்சலம், பாலர்ப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் , பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

மானியம் பெற்ற பாலர்பள்ளிகளின் விவரம் பின்வறுமாறு

எண் பள்ளியின் பெயர்

மானியம் (ரிம)

1. மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி

2,000

2. சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளி

3,000

3. கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,000

4. சிம்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி

3,000

5. பிறை தமிழ்ப்பள்ளி

2,000

7. பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,000

8. மேஃபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,000

9. பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி

2,000

10. பழனியாண்டி தமிழ்ப்பள்ளி

2,000

11. சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,000

12. பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

10,000

13. பய்ராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,000

14. வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,000

15. ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,000

16. ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி

2,000

17. புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி

2,000

18. பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி

2,000

19. நிபோங் தெபால் தமிழ்ப்பள்ளி

2,000

20. ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளி

1,500

21. அஸாத் தமிழ்ப்பள்ளி

1,500

22. சுங்கை அரா தமிழ்ப்பள்ளி

1,500

23. தாசெக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி

1,500

  மொத்தம்

50,000