முதல் பசுமை மாநிலமாக உருமாற்ற இலக்கு – முதல்வர்

Admin
பாடாங் லாலாங் மறுசுழற்சி திட்டத்தை துவக்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் (உடன் முக்கிய பிரமுகர்கள்)
பாடாங் லாலாங் மறுசுழற்சி திட்டத்தை துவக்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் (உடன் முக்கிய பிரமுகர்கள்)

பினாங்கு மாநில அரசு 2020-ஆம் நூற்றாண்டுக்குள் முதல் பசுமை மாநிலமாக உருமாற்றும் இலக்கில் மாநில அரசு இறங்கியுள்ளது என பினாங்கு நீர் வாரிய உல்லாச பூங்கா மற்றும் பாடாங் லாலாங் மறுசுழற்சி திட்டத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து உரையாற்றினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள். பினாங்கு மாநிலத்தில் மறுசுழற்சி விகிதத்தை 40% ஆக அதிகரிப்பதில் இந்த இலக்கை எளிதில் அடைய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய அளவில் 10.5% மட்டுமே மறுசுழற்சி விகிதத்தை அடைய திட்டம் கொண்டுள்ள வேளையில் பினாங்கு மாநிலம் தற்போது 32% மறுசுழற்சி திட்டத்தை அமல்படுத்துவது பாராட்டக்குரியதாகும். ‘உலகத்தை நாம் மாற்றியமைக்கும் முன், நாம் நம்மை மாற்றியமைக்க முடியும்’, என தமதுரையில் குறிப்பிட்டார் பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான சோங் எங். அண்மையில் பாடாங் லாலாங் தொகுதியில் நடத்திய ‘ஒரு நாளுக்கு ஒரு நிமிடம்’ கழிவுப்பொருட்களில் இருந்து தனிமைப்படுத்தும் திட்டத்தை அவ்வட்டார மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தியதில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என சூளுரைத்தார்.
இவ்வாண்டு இறுதிக்குள் 50% குப்பைகளை மறுசுழற்சி திட்டங்களின் வழி குறைத்தால் செபராங் பிறை நகராண்மைக் கழக கூடுதலாக ரிம 4 கோடி செலவினத்தை சிக்கனப்படுத்த முடியும். இவ்வாண்டு தொடங்கி மே மாதம் வரை 17,008 டன் குப்பைகள் அகற்றுவது குறைந்துள்ளதாகவும் இதனை அதிகரிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார் செபராங் பிறை நகராண்மைக் கழக அதிகாரி மைமுனா முகமது சாரிப். செபராங் பிறை நகராண்மைக் கழகம் இவ்வாண்டு தொடங்கி மார்ச் மாதம் வரை புலாவ் புரூங் குப்பை அகற்றும் இடத்தில் செய்த மறுசுழற்சியில் ரிம 1,136,541.60 செலவினத்தை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் மறுசுழற்சி மற்றும் அடிப்படை பொருட்களில் இருந்து கழிவுகளை தனிமைப்படுத்தும் திட்டங்களை அமல்படுத்த வரவேற்கப்படுகின்றனர். இதன்வழி பினாங்கு பசுமை,சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான மாநிலமாக பிரகடனப்படுத்த முடியும் என்பது திண்ணம்.