பினாங்கின் மருத்துவச் சுற்றுலா மூலம் 2026 முதல் ஆறு மாதங்களில் ரிம601.8 மில்லியன் வருமானம்

img 4868

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தின் மருத்துவச் சுற்றுலாத் துறை தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் நிலையில், 2025-ஆம் ஆண்டில் 527,176 வெளிநாட்டு நோயாளிகளை வரவேற்று, சுமார் ரிம1.14 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.
img 20261102 wa0025

பினாங்கு மாநிலத்தில் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்துவதில் பினாங்கு அனைத்துலக சுற்றுலா அமைப்பின் (PGT) சாதனைகள், அத்துடன் 2026 மலேசிய மருத்துவச் சுற்றுலா ஆண்டை (MYMT2026) முன்னிட்டு வெளிநாட்டு மருத்துவச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையையும் இத்துறையின் வருமானத்தையும் அதிகரிக்க மேற்கொள்ளப்படும் கூடுதல் நடவடிக்கைகள் குறித்து பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹொன் வாய், 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் பினாங்கு சுமார் 285,400 மருத்துவச் சுற்றுலாப் பயணிகளை வரவேற்று, ரிம601.8 மில்லியன் வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

மலேசிய மருத்துவச் சுற்றுலா மன்றத்தின் (MHTC) தரவுகளின்படி இந்தப் புள்ளிவிவரங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பினாங்கு அனைத்துலக சுற்றுலா அமைப்பு (PGT), MHTC, பினாங்கு மருத்துவச் சுற்றுலா மையம் (PMED), மலேசிய சுற்றுலா வாரியம், தனியார் மருத்துவமனைகள் மற்றும் விமான நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பே இந்த வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளதாகக் கூறினார்.

மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், PGT வெளிநாடுகளில் சுற்றுலா ஊக்குவிப்புப் பயணங்கள், வர்த்தகப் பொருத்தக் கூட்டங்கள் மற்றும் ஊடக, மின்னிலக்க விளம்பர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, சீனா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தைவான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளை இலக்காகக் கொண்டு விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனிடையே, MHTC உடனான ஒத்துழைப்பில் மியன்மார் மற்றும் மலேசிய ஊடகப் பிரதிநிதிகளுக்கான அறிமுகச் சுற்றுப்பயணங்களும் (Media FAM Trip) ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன் மூலம், பினாங்கின் மருத்துவமனை வசதிகள், மருத்துவச் சேவைகள் மற்றும் சுற்றுலா ஈர்ப்புகள் குறித்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

MYMT2026-ஐ முன்னிட்டு, விமான நிறுவனங்கள் மற்றும் மருத்துவத் துறை நிறுவனங்களுடனான சந்தைப்படுத்தல் ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏர் ஏசியாவுடன் இணைந்து ‘போர்டிங் பாஸ் சலுகைகள்’ எனும் சிறப்புச் சலுகைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மேலும், கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி தொடங்கப்பட்ட புதிய பத்தாம் – பினாங்கு விமானச் சேவை, இந்தோனேசியாவின் ரியாவ் தீவுப் பகுதியிலிருந்து மருத்துவச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பினாங்கிற்கு வருவதற்கான பயண வசதியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், கத்தார் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளையும் புதிய சந்தைகளாக அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காகத் தூதரகப் பிரதிநிதிகள், விமானப் போக்குவரத்துத் துறை, சுற்றுலா முகவர்கள் மற்றும் மருத்துவத் துறைப் பங்காளிகளுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், மருத்துவச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவர்களுடன் வருவோரின் பயண அனுபவத்தை முழுமையாக்கும் வகையில், பினாங்கின் உணவு, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் தங்குமிட வசதிகளும் தொடர்ந்து விளம்பரப்படுத்தப்படுகின்றன.

மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், சுற்றுலா முகவர்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம் நோயாளிகளின் பயணத் தேவைகளை எளிதாக்குவதுடன், அவர்களின் உடல்நிலைக்கு ஏற்ற வகையில் பினாங்கில் தங்கும் காலத்தையும் நீட்டிக்க முடியும்.

மருத்துவச் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மருத்துவத் துறைக்கு மட்டுமன்றி, தங்கும் விடுதிகள் மற்றும் உள்ளூர் வர்த்தகங்களுக்கும் பொருளாதாரப் பலன்களை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.