இந்திய சமூக மேம்பாட்டுக்கு மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை இணக்கம்

Admin

ஜார்ச்டவுன் – மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை, மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்டனர்.

மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவைத் தலைவர்  முனியாண்டி,  துணை தலைவர் மோகன், துணை பொருளாளர் தர்மன் மற்றும் அரசாங்க தொடர்பு அலுவல் அதிகாரி கேசவராஜ்
ஆகியோர் இன்று நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை இம்மாநிலத்தில்  கடந்த 40 ஆண்டுகளாக தனது 12 கிளைகளுடன் சிறந்த சேவையாற்றி வருகிறது. இச்சங்கத்தில் 4,000 உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர். 

மாநில முதல்வருடனான இச்சந்திப்புக் கூட்டத்தின் போது மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவையின் கீழ் செயல்படும் எழு பிரிவுகளின் திட்டங்கள் செயல்பாடு; அதன் நோக்கம் மற்றும் எதிர்கால திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. 

“எங்கள் சமூகப் பணிகள் மதம், கோயில், பெண்கள், இளைஞர்கள், சமூகநலன், கல்வி மற்றும் பல முக்கிய பிரிவுகள்  உள்ளடக்கியது,” என முனியாண்டி கூறினார்.

இந்த ஆண்டு கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் நோக்கில் இந்து சங்கம் பினாங்கு மாநில பேரவை ஏறக்குறைய ரிம100,000 நிதி ஒதுக்கீட்டில் பல சமூகநல திட்டங்கள்  மேற்கொண்டனர்.  

கோவிட்-19 தாக்கத்தால் இன்று வரை பொது மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு உதவக்கரம் நீட்டும் இந்து சங்க பினாங்கு மாநில பேரவையின் சேவையை முதல்வர் பாராட்டினார். 

இந்திய சமூகம் எதிர்நோக்கும் சில உணர்வுபூர்வமான சிக்கல்களைக் களைய மாநில அரசுடன் இணைந்து செயலாற்ற இணக்கம் தெரித்ததற்கு முதல்வர் பாராட்டுத் தெரிவித்தார்.

“மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவையின் 40-வது நிறைவு ஆண்டை முன்னிட்டு வருகின்ற மார்ச் மாதம்  விருந்தோம்பல் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் எழு தலைவர்கள் கெளரவிக்கப்படுவர். மேலும், இந்நிகழ்ச்சியை மாநில முதல்வர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்க வேண்டும்,” என தர்மன் கேட்டுக்கொண்டார். 

இந்து சங்க பினாங்கு மாநிலப்  பேரவை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து சமூகநலன் திட்டங்கள் வழிநடத்த   மாநில அரசிடம் இருந்து வருடாந்திர மானியமாக ரிம50,000 முதல் ரிம100,000  நிதியுதவி பெற கோரிக்கை துணை தலைவர் மோகன் விடுத்தனர்.

மாநில அரசு இக்கோரிக்கையைச் சீர்தூக்கிப் பார்த்து பரிசீலிக்கும் என தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் அவர்களுக்கு  பொன்னாடை போற்றி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.