Ji
ஜார்ச்டவுன் – இந்திய வம்சாவளி உலக அமைப்பு (GOPIO) மற்றும் மலேசியா வணிக கவுன்சில் (GMBC) ஏற்பாட்டில், இந்த மாதம் கோலாலம்பூரில் GOPIO தொழில்முனைவோர் மாநாடு & நெட்வொர்க்கிங் விருந்தோம்பல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
இந்த நிகழ்ச்சி, வருகின்ற மே 30 ஆம் தேதி மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, கோலாலம்பூர், ஜாலான் ராஜாவில் உள்ள ராயல் சிலாங்கூர் கிளப்பின் கிராண்ட் பால்ரூமில் நடைபெறும். தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தூதர்கள் ஒன்றிணைந்து, நெட்வொர்க்கிங், ஆலோசனைகள் பகிர்தல் மற்றும் புதிய வணிக வாய்ப்புகளை ஆராய்வதற்கான ஒரு தலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி பாகான் ஜெர்மாலில் அமைந்துள்ள இந்தியர் பினாங்கு சங்கத்தில் (பினாங்கு IA) நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது.
பினாங்கு மாநில இந்திய தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான இந்த முன்முயற்சியில் இணைந்து பணியாற்றும் GOPIO மற்றும் பினாங்கு IA நிறுவனங்களுக்கு மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு நன்றித் தெரிவித்தார்.
“இதுபோன்ற முயற்சிகளுக்கு மாநில அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும், மேலும் பினாங்கில் உள்ள இந்திய தொழில்முனைவோர் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற GOPIO வழிநடத்தும் திட்டங்களில் வழங்கப்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தனது உரையின் போது சுந்தராஜூ கூறினார்.”
GOPIO தொழில்முனைவோர் மாநாடு & நெட்வொர்க்கிங் விருந்தோம்பல் 2025 என்பது, புதுச்சேரி, இந்தியாவில் நடைபெறவிருக்கும் GOPIO அனைத்துலக வணிக கவுன்சில் (GIBC) உச்ச மாநாடு 2025-க்கான முன்னோட்டம் என்று அறியப்படுகிறது.
மலேசிய GOPIO மற்றும் GMBC தலைவருமான எஸ். குணசேகரன், உள்ளூர் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், பெருநிறுவன வல்லுநர்கள், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் GOPIO தொழில்முனைவோர் மாநாடு & நெட்வொர்க்கிங் விருந்தோம்பலில் 2025 இல் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார்.
“மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆசியான் முழுவதிலுமிருந்து 200-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், புத்தாக்க நிபுணர்கள் மற்றும் வணிகத் தலைவர்களுடன் நிபுணர் உரைகள், தொடக்க நிறுவன கண்காட்சி மற்றும் நெட்வொர்க்கிங் ஆகியவை அத்தினத்தன்று இடம்பெறும்.”
“இந்நிகழ்ச்சியில் முக்கியமாகக் கலந்துரையாடப்படும் தலைப்புகள்: ‘உள்நாட்டு வணிகம் உலகளாவியமாக முன்னேறுதல்’; ‘தொலைநோக்கு நிறுவனத்திலிருந்து பங்குச் சந்தை வர்த்தகம் வரை (SME முதல் IPO வரை)’; ‘2025 ஆம் ஆண்டிற்கான ஆசியான் பொருளாதார முன்னோக்கு’ மற்றும் ‘தொழில்முனைவோர்களுக்கான தொழில்நுட்ப எதிர்காலம்’ என்பவையாகும்.” என்று அவர் மேலும் கூறினார்.
முன்பதிவு அல்லது கூடுதல் விவரங்களுக்கு, மஹா 011-1668 3552 என்ற எண்ணில் அல்லது டாக்டர் சிவம் 016-410 4426 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும்.
இதற்கிடையில், பினாங்கில் திறன் மிக்க தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்து வருவதை GSH Precision Technology இயக்குனர் (கார்ப்பரேட் & வணிகத் துறை) ஜே. பிலிப் வின்சென்ட் எடுத்துரைத்தார்.
பிலிப்பின் கூற்றுப்படி, பட்டதாரிகளும் வேலை தேடுபவர்களும் வேலை சந்தையில் பொருத்தமானவர்களாக இருக்க தங்களை சுயமாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும். பினாங்கில், குறிப்பாக AI மற்றும் பொறியியல் துறைகளில் உயர்நிலை தொழிலாளர்கள் தேவை அவசியமாகும்.
இலக்கவியல் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதுடன், திறன் மிக்க நபர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது என தொழில்நுட்ப நிபுணர் பிலிப் கூறினார்.
பினாங்கு இந்தியர் சங்கத்தின் தலைவர் டாக்டர் கலைகுமார், இச்சங்கத்தில் அதிகமானோர் உறுப்பினர்களாக பதிவு செய்ய அழைப்பு விடுத்தார். இது இந்தியச் சமூகத்திற்கு அதிக அதிகாரமளிக்கும் திட்டங்களைக் கொண்டு வருவதற்கும், தொடர்புடைய அமைப்புகளுடன் ஒத்துழைப்பு நல்குவதற்கும் உறுதிணையாக அமையும், என்றார்.