மாக் மண்டின் – “பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உறுதி செய்கிறது. இது, இந்த வாரியத்தின் தொடர்ச்சியான ஆதரவும், அர்ப்பணிப்பும் மூலம் நன்கு சித்தரிக்கப்படுகிறது.
“இந்து சமூகத்தின் மதம், கலாச்சாரம், கல்வி, சமூகநலன் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்குடன், இந்து ஆலயங்கள், தெய்வ வழிபாடுகள் மற்றும் வாரியத்தின் சொத்துகள் ஆகியவற்றை பராமரிப்பதில் இந்த வாரியம் முக்கிய பங்கு வகிக்கிறது.

“இந்த முயற்சிகள், வாரியத்தின் தொடர்ச்சியான ஆதரவு, அர்ப்பணிப்பு மற்றும் சமூக நலனுக்கான திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் வெளிப்படுகின்றன,” பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினரும் இந்து அறப்பணி ஆணையருமான குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
அண்மையில், மாக் மண்டின் ஸ்ரீ முருகன் பரிபாலன அவை ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலய நிர்வாகத்திடம் ரிம10,000 நன்கொடைக்கான காசோலையை ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிதியுதவி, சட்டமன்ற உறுப்பினருடன் செபராங் பிறை (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர் லிங்கேஸ்வரன் சர்மார் இணைந்து, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தைப் பிரதிநிதித்து காசோலையை வழங்கினர்.
இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் மகா கும்பாபிஷேக விழாவானது தூய்மை மற்றும் ஆன்மீக புதுப்பித்தலைக் குறிப்பது மட்டுமல்லாமல், பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் தியாகத்தின் மதிப்பு மூலம் உள்ளூர் சமூகத்தினரிடையே ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்துகிறது.
இந்த நன்கொடை ஆலயத்தின் ]மேம்பாடு மற்றும் பராமரிப்புக்குப் பயன்படுத்த துணைபுரியும். இதன் மூலம் இந்து சமூகத்தினர் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது.
கோவில்கள் என்பது வெறும் கட்டிடங்கள் அல்ல, அவை ஒவ்வொருவரின் நம்பிக்கையின் தூண்கள். அவற்றின் பாதுகாப்பு, சமுதாயத்தின் நல்லிணக்கத்திற்கும் முக்கியமாகும்.