செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழகம் வரலாற்றில் முதல் முறையாக இந்தியர்களுக்கென பிரத்தியேகமாக இந்தியர் ஊழியர் சங்கம் (PERSAKTI MBSP) தொடங்கப்பட்டுள்ளது.
செபராங் பிறை மாநகர் கழகம் இந்தியர் ஊழியர் சங்கம் (PERSAKTI MBSP) இங்குள்ள இந்திய ஊழியர்களின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வை விரிவான முறையில் வலுப்படுத்துவதற்கான எம்.பி.எஸ்.பி-இன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு மூலோபாய நடவடிக்கை என செபராங் பிறை மாநகர் கழகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் மேயர் டத்தோ ஹஜி படேருல் அமின் தெரிவித்தார்.
PERSAKTI MBSP 2025 ஜூன்,1 முதல் அமலுக்கு வரும். மேலும், அதன் உறுப்பினர்களாக இங்குப் பணிபுரியும் அனைத்து 267 இந்திய ஊழியர்களும் இடம்பெறுவர். இச்சங்கத்தின் ஆலோசகராக எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்களான லிங்கேஸ்வரன் சர்மார், பொன்னுதுரை அந்தோனிசாமி மற்றும் பிரதீப் திகழ்வர். செபராங் பிறை மாநகர் கழகம் இந்தியர் ஊழியர் சங்கம் தலைவராக மங்கலேஸ்வரி முனியாண்டி பொறுப்பேற்கிறார்.

“சுமார் ஓராண்டு போராட்டத்திற்கு பின்னர் இந்தச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கம் இந்தியர் ஊழியர்களின் நலனை பாதுகாப்பதிலும் கொடுப்பனவுகள் மற்றும் பணியிட வசதிகள் போன்ற கூடுதல் சலுகைகளைப் பெற உதவும். அத்துடன் ஊழியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பணிச்சூழலை உறுதி செய்கிறது”, என எம்.பி.எஸ்.பி கவின்சிலரும் சங்கத்தின் ஆலோசகருமான லிங்கேஸ்வரன் முத்து செய்திகள் நாளிதழ் நிருபரிடம் இவ்வாறு தெரிவித்தார்.
இச்சங்கத்தை தோற்றுவிப்பதற்காக ஆதரவும் ஒப்புதலும் வழங்கிய எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ ஹஜி படேருல் அமின் மற்றும் கவின்சிலர்களான பொன்னுதுரை அந்தோனிசாமி மற்றும் பிரதீப் அனைவருக்கும் லிங்கேஸ்வரன் நன்றியைத் தெரிவித்து கொண்டார்.
இதனிடையே, ஒற்றுமை, சமூகநலன் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்தியத் ஊழியர்கள் இந்தச் சங்கத்தில் சேர ஊக்குவிக்கப்படுகின்றனர்.
கூடுதலாக, PERSAKTI நிறுவுதல் வாயிலாக பல்வேறு சமூகநலன், கலாச்சாரம், சமூகம் மற்றும் மனித மூலதன மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும். இது எம்.பி.எஸ்.பி இல் பணிபுரியும் இந்தியர் ஊழியர்கள் சமூகத்தின் ஈடுபாட்டை நேரடியாக வலுப்படுத்தும் என லிங்கேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.
உண்மையில், PERSAKTI MBSP இந்திய தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கும், மனித மூலதன திறனை மேம்படுத்துவதற்கும், பொது சேவையில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதற்கும் ஒரு தலமாக உருமாற்றம் காணும். மேலும், காலப்போக்கில் PERSAKTI அதன் உறுப்பினர்களின் நலனைக் கவனிப்பது மட்டுமல்லாமல், இந்த அமைப்பில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்புக்கும் பங்களிக்கும் ஒரு சுறுசுறுப்பான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த சங்கமாக திகழும் என அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.