ஜார்ச்டவுன் – பல்வேறு பின்னணியில் இருந்து மொத்தம் 12 புதிய முகங்கள் பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) கவுன்சிலர்களாக இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலையில் எஸ்பிளனேட்டில் உள்ள சிட்டி ஹாலில் நடந்த பதவியேற்பு விழாவில் புதிய முகங்கள் உட்பட 23 கவுன்சிலர்களும் பதவியேற்றனர்.
இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், தேர்வுச் செய்யப்பட்ட அனைத்து கவுன்சிலர்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“23 கவுன்சிலர்களில், 12 பேர் புதிய முகங்கள், மீதமுள்ள 11 பேர் முன்னாள் கவுன்சில்கள் அவர்களது பதவியைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளனர்.
“மாநில அரசு சார்பாக, அவர்களின் நியமனங்களை நான் வரவேற்கிறேன். மேலும், அவர்கள் உள்ளூர் மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்வார்கள் என்றும், பினாங்கு இன்னும் உயரத்திற்கு முன்னேறுவதை உறுதி செய்வதில் புணைப்புடன் இருப்பார்கள்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“அனைத்து கவுன்சிலர்களும் மக்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே இணைப்பாளராகச் செயல்பட வேண்டும்,” என்று கூறினார்.
15 ஆண்டு காலமாக கவுன்சிலர்களாக சேவை வகித்த ஹர்விந்தர் சிங் மற்றும் டத்தோ பிரான்சிஸ் ஜோசப் ஆகிய இருவருக்குமே சாவ் நன்றித் தெரிவித்தார்.
இன்று பதவியேற்ற அனைத்து கவுன்சிலர்களும் 24 முதல் 61 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
புதிய கவுன்சிலர்கள் பினாங்கு2030 இலக்கை அடைய தங்களால் இயன்றவரை தொடர்ந்து சேவையாற்றுவர் என்று சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.
“நான் முன்பு கூறியது போல், பினாங்கு வாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக கூடுதல் உள்கட்டமைப்புத் திட்டங்களை கொண்டு வருவதன் மூலம் மாநிலத்திற்கு என்னால் முடிந்த சேவையை ஆற்றுவேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
மாநில உள்ளாட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு தலைவர் ஜேசன் ஹெங் 23 கவுன்சிலர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.
“சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எம்.பி.பி.பி மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஆகிய இரு ஊராட்சி மன்றங்களின் முன்முயற்சிகளுக்கும் மாநில அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.
“மக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
அம்னோ பிரதிநிதிகளுக்கான வேட்புமனுக்கள் குறித்து கேட்டபோது, அவர்கள் இந்த வாரம் மூன்று பிரதிநிதிகளின் நியமனத்தை சமர்பிப்பார்கள் என்று எங் கூறினார்.
“அவர்களில் ஒருவர் எம்.பி.பி.பி கவுன்சிலராகவும், மேலும் இரண்டு பேர் எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்களின் இடங்களையும் நிரப்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
“சட்ட விதிமுறைகளின்படி, எட்டு கவுன்சிலர்கள் இருந்தால் ஒரு ஊராட்சி மன்றம் அமைக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ இராஜேந்திரன் தனது உரையில், கவுன்சிலர்களின் நியமனங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், முதலாம் துணை முதலமைச்சர் டத்தோ டாக்டர் முகமது அப்துல் ஹமீட், இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ, மாநில செயலாளர் டத்தோ முகமட் சாயுத்தி பாக்கர் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.