சியா போய் நகர்ப்புற தொல்பொருள் பூங்கா பல்நோக்கு மையமாகச் செயல்படுகிறது

Admin

ஜார்ச்டவுன் – நாட்டின் முதல் நகர்ப்புற தொல்லியல் பூங்காவாகக் கருதப்படும் சியா போய் நகர்ப்புற தொல்பொருள் பூங்கா தற்போதைய வளர்ச்சியைக் காட்டிலும் விரைவில் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டுவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது.

“இது ஒரு பொழுதுபோக்கு இடமாக மட்டுமின்றி கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்று நடத்தும் தலமாக உருமாற்றம் காணும் வாய்ப்பு உள்ளது,” என்று மாநில சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹான் வாய் கூறினார்.

பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் வோங் இயூ ஹர்ங் சட்டமன்றத்தில் உரையாற்றினார்.

பினாங்கு மாநில சட்டமன்ற அமர்வின் போது பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் வோங் இயூ ஹர்ங் இன் துணைக் கேள்விக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் இவ்வாறு பதிலளித்தார்.

இத்தலத்தின் பயன்பாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு சியா போய் தற்போது பொது மக்களுக்கான பொழுது போக்கு பூங்காவாக செயல்படுகிறது என பதலளித்தார்.

“இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பினாங்கு தீவு கிரியேட்டிவ் தியேட்டர் ஆர்ட்ஸ் சங்கம் (KREATER) நடத்திய வடக்கு பாரம்பரிய நாடக விழா@ஜார்ஜ்டவுன் (FTTU 2023) நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தேன்.

“இந்த நிகழ்ச்சியில் பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய இடங்களில் இருந்து ஐந்து பாரம்பரிய நாடக நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன,” என்று வோங் தனது பதிலில் இவ்வாறு கூறினார்.

இந்தப் பூங்கா பல்வேறு நோக்கங்களுக்காக, குறிப்பாக பினாங்கில் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும். இந்த சியா போய் பூங்காவில் ஜார்ச்டவுன் விழா (GTF) போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதை வோங் மேற்கோள் காட்டினார்.

இலகு இரயில் சேவை (எல்.ஆர்.டி) திட்டம் தொடங்கும் வரை பூங்காவின் அருகாமையில் தற்காலிக வாகனங்களை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கேள்விக்கு, பினாங்கு மேம்பாட்டுக் கழகத்துடன்(PDC) இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கப்படும் என தனது விருப்பத்தை வோங் வெளிப்படுத்தினார்.

முன்னதாக மாநில மற்றும் மத்திய அரசாங்கம் கூட்டாக, ஜார்ச்டவுன், சியா போய் நகர்ப்புற தொல்பொருள் பூங்கா அருகாமையில் எல்.ஆர்.டி நிலையம் நிர்மாணிக்க முன்மொழியப்பட்டது.

மாநில அரசாங்கம் வரவு செலவு திட்டத்தின் கீழ் வருடாந்திர மானியமாக பூங்கா நிர்வாகத்திற்காக 2020 முதல் 2023 வரை ரிம527,760 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது என்று வோங் தெரிவித்தார்.

கூடுதலாக, PDC கீழ் பல்வேறு பூங்காக்களை மேம்படுத்தும் பணிகளுக்காக 2019 முதல் ரிம29,130,341 முதலீடு செய்துள்ளது. பூங்காவிற்குள் பொதுக் கழிப்பறை கட்ட பொருளாதார அமைச்சிடம் இருந்து மானியம் கோரும் நடவடிக்கையில் மாநில அரசு உள்ளது.