சீக்கியர்களின் வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் – பேராசிரியர்.

Admin

பாயான் பாரு – பினாங்கு மாநில சீக்கியர்கள் புதிதாக மேம்படுத்தப்பட்ட பாயான் பாரு குருத்வாரா வளாகத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்; இன்றைய இளைய தலைமுறையினர் நம் நாடு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு சீக்கியர்கள் ஆற்றிய தியாகம் மற்றும் கலாச்சார வரலாற்றை அறிவுறுத்த இத்தலத்தை பயன்படுத்துமாறு அண்மையில் பாயான் பாரு குருத்வாராவில் நடைபெற்ற 550-ஆவது குரு நாளான குரு தேவ் ஜி பிறந்தநாள் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சியை துவக்கி வைத்து தமதுரையில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி இவ்வாறு குறிப்பிட்டார்.

கண்காட்சிக்கு வைக்கப்பட்ட கைவினைப் பொருட்கள்

பாயான் பாரு குருத்வாரா மேம்பாட்டிற்கு இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தளத்தின் கீழ் நிலம் ஒதுக்கீட்டை மாநில அரசு நல்கியதை மாநில இரண்டாம் துணை முதல்வர் குறிப்பிட்டார். மேலும், நில ஒதுக்கீடு கோருவதால் அதனை முறையாக மாநில அரசிடம் விண்ணப்பிக்குமாறு பேராசிரியர் பாயான் பாரு குருத்வாரா நிர்வாக குழுவினரிடம் கேட்டுக்கொண்டார். இந்த விண்ணப்பத்திற்கு தம்மால் இயன்ற உதவிகளை நல்குவதாக பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாபி பள்ளிகளுக்கு மானியம் வழங்கி வருவது மாநில அரசு இன மத பேதமின்றி அனைத்து பள்ளிகளையும் பராமரிப்பதை சித்தரிக்கின்றது. இம்மானியம் தொடர்ந்து வழங்கப்படுவதை மாநில அரசு உறுதிப்படுத்தும் என பேராசிரியர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஆசிரியர் பணியில் இருந்து பதவி ஓய்வுப்பெற்ற பெருநிலத்தைச் சேர்ந்த மால்கியாட் சிங் லோபோ சீக்கியர்களின் வரலாற்று சிறப்புமிக்க கைவினை பொருட்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர். இவரின் கைவடிகளால் அமைக்கப்பட்ட பொருட்கள் அத்தினத்தன்று கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இது வருகையாளர்களை பெரிது கவர்ந்தது என்றால் மிகையாகாது. பொம்மைகளுக்கான பாரம்பரிய உடைகள், விசிறிகள், வார்பட்டை, ‘எம்பிராய்டரி’ தலையணைகள் மற்றும் போர்வைகள் போன்ற கைவினைப்பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.