ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி நிலப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வுக்காணப்படும் – சுந்தராஜு

Admin
remasterdirector v0 RemasterDirector_V0

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்மொழி, மலாய்மொழி, ஆங்கிலமொழி ஆகிய மும்மொழிகளிலும் சாதனைப் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் 22-வது முறையாக மும்மொழிப் போட்டி மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் பினாங்கு மாநிலத்தைச் சார்ந்த 27 தமிழ்ப்பள்ளிகளும் பங்கேற்றனர்.

இந்த மும்மொழிப் போட்டியில் ஏழு வகைப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இதில் கட்டுரை எழுதும் போட்டி, கதை போட்டி, தமிழ் எழுச்சிப் பாடல் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் பல போட்டிகள் இடம்பெற்றுள்ளன. திருக்குறளின் மாண்பினை மாணவர்களிடையே மேம்படுத்தும் பொருட்டு திருக்குறளின் கருத்தை மையமாக வைத்து மலாய் மொழியில் பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் கூறும் நற்பண்புகளை மையமாக வைத்து தமிழ்மொழியில் பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளின் வாயிலாக மாணவர்களின் மொழித்திறன், பேச்சுத்திறன் மற்றும் எழுத்தாற்றலை வெளிப்படுத்தப்படுகிறது. இந்த மும்மொழிப் போட்டி மாணவர்களின் இலை மறை காயாக மறைந்திருக்கும் மொழித்திறன், பேச்சுத்திறன் மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் அரங்கமாக திகழ்கிறது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ சுந்தராஜூ, மும்மொழி போட்டியை ஏற்பாடு செய்த பினாங்கு இந்தியர் சங்கத்தின் முன்முயற்சியைப் பாராட்டினார்.

மேலும் பேசுகையில், பினாங்கு மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை வலுப்படுத்த மாநில அரசு செயல்படுத்தி வரும் முயற்சிகள் குறித்து விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆட்சிக்குழு உறுப்பினர் வலியுறுத்தினார்.

மாநில அரசு இம்மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தமிழ்ப்பள்ளிகளின் பங்களிப்பை கூட்டாட்சி அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமையாக அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், தமிழ்ப்பள்ளிகளை இந்திய சமூகத்திற்கான கலாச்சார மற்றும் மொழி மேம்பாட்டுத் தலமாகவும் மேற்கொள் காட்டுகிறது.

“இதற்குச் சான்றாக அண்மையில் ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கியிருக்கும் நிலப் பிரச்சனையை கையாள்வதில் மாநில அரசு முனைப்பு காட்டியுள்ளது.

“இப்பள்ளிக்கு தற்போது நிலத்தினை அடையாளம் கண்டுள்ளோம். கூடிய விரைவில் ஆட்சிக்குழு கூட்டத்தில் இதனை விவாதித்து, அவ்வட்டார மக்களுக்கும் ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் சுமூகமான தீர்வினை வழங்குவோம். இதற்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் ஆதரவும் அளித்துள்ளார்,” என இராமகிருஷ்ணா ஆசிரம மண்டபத்தில் நடைபெற்ற 22-ஆவது மும்மொழி போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிறை சட்டமன்ற உறுப்பினருமான சுந்தராஜு தமதுரையில் குறிப்பிட்டார்.

மும்மொழிப் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ சுந்தராஜு பரிசுக் கோப்பை மற்றும் நற்சான்றிதழ் எடுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பினாங்கு இந்தியர் சங்கப் புரவலர் டத்தோ செல்வகுமார், பினாங்கு இந்தியர் சங்கத் தலைவர் டாக்டர் கலைக்குமார் நாச்சி மற்றும் சங்க பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆதரவு நல்கினர்.