ஜார்ச்டவுன் – எதிர்கால சந்ததியினரை எதிர்கால சவால்களுக்குத் தயாராக்கவும், அவர்களின் திறமைகளை எதிர்கால சந்தை தேவைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்ய தகவல் தொழில்நுட்பம் அவசியம் என்று இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ தெரிவித்தார்.

இன்று ரியா இன்னில் தங்குவிடுதியில் நடைபெற்ற வடக்கு பிராந்திய தேசிய பயிற்சி வாரம் (NTW) 2025 தொடக்க விழாவில் கலந்து கொண்டபோது ஜக்தீப் இதைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.
“குறைக்கடத்தித் துறையின் இலக்கை அடைய, மலேசியா 2030 ஆம் ஆண்டுக்குள் 60,000 திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தேசிய குறைக்கடத்தி மூலோபாய (NSS) தரவு கூறுகிறது.
“இன்னும் அதிக நேரம் இல்லை, நமது பணியாளர்களை தயார்படுத்த இப்போதே நாம் செயல்பட வேண்டும். எனவே, கல்வி மற்றும் திறன் பயிற்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறோம்,” என்று நிகழ்ச்சியில் தனது உரையின் போது ஜக்தீப் கூறினார்.
வடக்கு பிராந்திய NTW 2025 கற்றல் சுற்றுலாவை மனிதவள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp) பினாங்கு உள்கட்டமைப்புக் கழகம் (PICSB) உடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கிடையில், மேம்பட்ட தொழில்நுட்ப மெய்ஸ்டர் திட்டத்தின் மூலம் மனிதவள மேம்பாட்டுக் கழகமும் வடக்கு கோரிடார் அமலாக்க ஆணையமும் (NCIA) இணைந்து ஒரு இணை தொகை மானியத்தை அறிமுகப்படுத்தி வருவதாக சிம் பகிர்ந்து கொண்டார்.
“உள்ளூர் தொழில்துறைகளை மேம்படுத்த தொழில்நுட்பத் துறைகளில் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்த உதவும் வகையில் இந்த மானியம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“அதுமட்டுமின்றி, சிலிக்கான் தீவு திட்டத்துடன் தொடர்புடைய சுமார் 420 மீனவர் குடும்பங்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை ஆராய உதவும் வகையில் தகவல் தொடர்பு, தொழில்முனைவோர், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் AI போன்ற திறன்களில் பயிற்சி மற்றும் மேம்பாட்டைப் பெறுவர்,” என்று இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.
பினாங்கு சிப் டிசைன் அகாடமியை மேலும் வலுப்படுத்த மாநில அரசாங்கத்துடன் ஓர் ஒத்துழைப்பை இறுதி செய்ய மனிதவள அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சிம் கூறினார்.
“பினாங்கின் குறைக்கடத்தி மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துவதில் பினாங்கு சிப் டிசைன் அகாடமி முக்கியப் பங்கு வகிக்கும். இந்த நிறுவனம் நமது திறமையான பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் மனித மூலதனத்தை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
“இது ஒரு மாநில அரசு திட்டம், இது ஏற்கனவே முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
“மாநில அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இந்த முயற்சிக்கு மதிப்பு சேர்க்க விரும்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக தனது உரையில், உலகப் பொருளாதார மன்றம் 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய குறைக்கடத்தித் துறையில் பினாங்கை ஒரு முக்கிய மையமாக அங்கீகரித்துள்ளது என்பதையும் சிம் எடுத்துரைத்தார்.
மனிதவள அமைச்சால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும், தொழிலாளர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் உட்பட, வழங்குவதற்காக, பிரதான நிலப்பகுதியில் One-Stop தொழிலாளர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக சிம் பகிர்ந்து கொண்டார்.
இந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பி40 குழுவினர், மாற்றுத்திறனாளிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உட்பட பல்வேறு குழுக்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் ஒன்றுக்கூடினர்.
NTW 2025 திட்டத்தில் 3.2 மில்லியனுக்கும் அதிகமான பங்கேற்புகள் மூலம், 1 மில்லியன் இலக்கைத் தாண்டியுள்ளதாகவும் சிம் கூறினார். ‘எல்லைகளைக் கடந்த கற்றல்’ (‘Learning Beyond Borders’) என்ற கருப்பொருளின் கீழ் இதுவரை 72,000 க்கும் மேற்பட்ட படிப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸ் முழுவதும் கிட்டத்தட்ட 800 பயிற்சி படிப்புகள் வடக்குப் பகுதியில் மட்டும் 167,000-க்கும் மேற்பட்ட பங்கேற்புகள்
பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இந்தத் திட்டம் வாயிலாக ரோபோடிக் கோடிங், AI அடிப்படைகள், சைபர் பாதுகாப்பு, அவசர முதலுதவி (AED), மனநல விழிப்புணர்வு, தொழில்முனைவோருக்கான கூட்டுறவு சட்டம் ஆகிய பல்வேறு பயிற்சி அமர்வுகளை உள்ளடக்கியுள்ளது.
அதோடு, உடல்பேறு குறைந்தவர்களுக்கு
ஒப்பனை போன்ற படைப்பு திறன் பட்டறைகள் உள்ளடக்கியுள்ளது.