பினாங்கு அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் அறிவிப்பு

60d94791 3181 4591 956e f6ead4dd3efb

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசின் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் அர்ப்பணிப்புடனும் கடமை உணர்வுடனும் பணியாற்றி வரும் மாநில அரசு ஊழியர்களைப் பாராட்டும் வகையில், அவர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் சிறப்பு நிதியுதவியை (BKK) மாநில அரசு அறிவித்துள்ளது.

மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகையில், பினாங்கு மாநிலத்தின் வலுவான நிதி நிலைமையையும், வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றத்தையும் திறமையான, நேர்மையான மற்றும் சிறப்பாகச் செயல்படும் அரசு நிர்வாகக் கட்டமைப்பின் ஆதரவின்றி அடைந்திருக்க முடியாது, என்றார்.

இந்த ஆண்டு முழுவதும் மாநில அரசு ஊழியர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பும் கடமை உணர்வும் தேசிய அளவில் பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றுள்ளதாகவும், இது மாநில அரசின் சிறந்த நிர்வாகத்தையும், பொதுச் சேவை வழங்கலின் தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அவற்றில், 2025ஆம் ஆண்டுக்கான அதிகாரத்துவச் சிக்கல்களைக் களைவதற்கான சீர்திருத்தத் திட்டத்தின் (Reformasi Kerenah Birokrasi – RKB) கீழ், அதிக எண்ணிக்கையிலான திட்டங்களை நிறைவு செய்த மாநிலம் என்ற அங்கீகாரமும் ஒன்றாகும்.

“அதேபோன்று, பினாங்கு மாநிலச் செயலக அலுவலகம், ஒருமைப்பாடு மற்றும் நல்லாட்சி மேலாண்மை முறைமையின் (SPINE) மதிப்பீட்டில் 97.84 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்று, சிறந்த நிறுவனத்திற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது,” என்றார்.

பினாங்கு மாநிலத்தின் 15ஆவது சட்டமன்றத்தின் நான்காவது தவணைக்கான இரண்டாவது கூட்டத்தொடரில், 2027ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், மாநிலப் பொதுச் சேவைப் பணியாளர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில், சமயக் கல்வி மற்றும் தனியார் கல்வித் துறைகளில் பணியாற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு ஒருமுறை வழங்கப்படும் ரிம300 ஊக்கத்தொகையையும் முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, அல்-குர்ஆன் மற்றும் ஃபர்து ஐன் வகுப்புகளின் (KAFA) மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், மக்கள் சமயத் தொடக்கப்பள்ளிகளின் (SRAR) ஆசிரியர்கள், மக்கள் சமய இடைநிலைப் பள்ளிகளின் (SMAR) ஆசிரியர்கள் மற்றும் அவற்றின் பணியாளர்கள் ஆகியோர் இந்த உதவியைப் பெறுவர்.

மேலும், அரசாங்க உதவிபெறும் சமயப் பள்ளிகளின் (SABK) ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், தஹ்ஃபீஸ் பள்ளி ஆசிரியர்கள், பொண்டோக் சமயப் பள்ளி ஆசிரியர்கள், இஸ்லாமிய மழலையர் பள்ளி (TADIS) ஆசிரியர்கள், பினாங்கு மாநிலத்தில் உள்ள சீனத் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் இந்த ஊக்கத்தொகையைப் பெறுவர்.

சிறப்பு நிதியுதவி மற்றும் ஒருமுறை வழங்கப்படும் ஊக்கத்தொகை ஆகிய இரண்டின் மூலம் மொத்தம் 7,292 பேர் பயனடைவதுடன், இதற்காக மாநில அரசுக்கு ரிம16.207 மில்லியன் நிதிச்சுமை ஏற்படும் என சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

இந்த அனைத்து நிதியுதவிகளும் 2026 டிசம்பர் மாதத்தில் வழங்கப்படவுள்ளன. மாநில நிர்வாகம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு ஆதரவளித்து வரும் பயனாளர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இந்நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.