பினாங்கு-பேராக் நீர் ஒப்பந்தத் திட்டம் சாதகமான மேம்பாடுக் காண துணைபுரியும்

Admin
img 20240704 wa0101

 

சுங்கை பாக்காப் – கிரியான் ஒருங்கிணைந்த பசுமைத் தொழில் பூங்கா மூலம் பேராக் அரசாங்கத்திடம் இருந்து பினாங்கு மாநிலம் போதுமான அளவு நீர் விநியோகத்தைப் பெறும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சமீபத்தில் அறிவித்ததை பினாங்கு அரசாங்கம் வரவேற்கிறது.

கடந்த ஜூலை,2 அன்று அன்வார் நாடாளுமன்றத்தில், பேராக் நதியிலிருந்து மூல நீரை புக்கிட் மேரா அணைக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார். இந்த முயற்சி வடக்கு பேராக் மற்றும் பினாங்குக்கு ஒரு நாளைக்கு 1,500 மில்லியன் லிட்டர் நீரை (MLD) வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தால் இரு மாநில மக்களும் பயனடைவர்.

 

பினாங்கு முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இந்த அறிவிப்பை பினாங்கு மாநிலத்திற்கு நல்ல செய்தி என்று வரவேற்றார்.

“இரு தரப்பிலிருந்தும் பொறுப்புள்ள கட்சிகள் பினாங்கு-பேராக் நீர் ஒப்பந்தத்திற்கான செயல்முறையை எளிதாக்கியுள்ளன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

“இருப்பினும், இந்த ஒப்பந்தம் இன்னும் ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது. மேலும், இத்திட்டத்தால் பினாங்கு பெறும் நீரின் சரியான அளவு (MLD), சுத்திகரிக்கப்பட்ட நீரின் விலை மற்றும் பிற தொழில்நுட்ப போன்ற விவரங்கள் அறிய கூடுதல் சந்திப்புக் கூட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

“அதிகமான நீர் பேராக் மாநிலத்திற்கு விநியோகிக்கப்படும். அதேவேளையில், பினாங்கு மாநிலத்திற்கு 700 MLD நீர் பெறுமானால், அது தெற்கு செபராங் பிறை மாவட்டத்தில் குடிமக்ககளின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய போதுமானதாக இருக்கும்.

“பினாங்கு பெற வேண்டிய சரியான நீரின் அளவு குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

 

“இருந்தாலும், இரு மாநிலங்களுக்கும் 1,500 MLD நீர் பெறப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு, பினாங்கு-பேராக் நீர் ஒப்பந்தத்திற்குச் சாதகமான வளர்ச்சியை உருவாக்கும்,” என்று சாவ் இன்று சுங்கை பாக்காப்பில் உள்ள பண்டார் தாசெக் முத்தியாராவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

உள்ளூர் இந்தியச் சமூகத்தினருடனான சந்திப்பில் கலந்து கொண்ட முதலமைச்சர், நீர் பிரச்னைகள், நீர் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பிற உள்ளூர் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்களிடம் கலந்துரையாடினார்.

 

img 20240704 wa0099

இந்தச் சந்திப்புக் கூட்டத்தில், சாவ்வின் மூத்தச் செயலாளர் முகமட் பல்கிஷ் ஓத்மான், சுங்கை புயு சட்டமன்ற உறுப்பினர் பீ சின் தீ, கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங், மச்சாங் புபோக் சட்டமன்ற உறுப்பினர் லீ கை லூன், புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியோ-லியுங், தேசிய நீர் சேவை ஆணையத்தின் (SPAN) தலைவர் சார்லஸ் சந்தியாகோ மற்றும் பினாங்கு பி.கே.ஆர் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.