ஜார்ஜ்டவுன் – பினாங்கு மாநில அரசு, 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்திர நிதி ஒதுக்கீடாக, 28 தமிழ்ப்பள்ளிகள், அவற்றின் மேற்பார்வையின் கீழுள்ள 14 பாலர்பள்ளிகள் மற்றும் 3 பஞ்சாபி கல்வி மையங்களுக்கு மொத்தமாக ரிம2,420,000 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடு தமிழ்ப்பள்ளிகளின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு எடுத்து வரும் ஒரு முக்கியமான முன்னெடுப்புத் திட்டமாக திகழ்கிறது. மேலும், தமிழ்ப்பள்ளிகளுக்காக பொது வசதிகளை மேம்படுத்தி, மாணவர்களுக்கான வசதியான கற்றல் மற்றும் கற்பித்தல் சூழலை உருவாக்கி வழங்க தொடர்ந்து செயல்படுகிறது.

மாநில அரசு, தமிழ்ப்பள்ளிகளுக்கான பொது வசதிகள் மேம்பாடு மற்றும் வசதியான கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்க தொடர்ந்து பணியாற்றும்.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூவுடன் இணைந்து, இன்று கொம்தாரில் உள்ள ஆடிட்டோரியம் எஃப் அரங்கில் நடைபெற்ற 28 பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகள், பாலர்பள்ளிகள், பஞ்சாபி பள்ளிகள் மற்றும் தெலுங்கு கல்வி மையங்களுக்கு காசோலை வழங்கும் விழாவில் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கினார்.

“இந்தத் தொகையில், ரிம268,100 நிதி தமிழ்ப்பள்ளிகளின் மேற்பார்வையின் கீழ் உள்ள 14 மழலையர் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டது, அதே நேரத்தில் ரிம1,782,000 தொகை பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கம் (PIBG) மூலம் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு வழங்கப்படுகிறது.
“கூடுதலாக, மூன்று பஞ்சாபி கல்வி மையங்களுக்கு மொத்தம் ரிம120,000 வழங்கப்பட்டது, ஒவ்வொன்றுக்கும் ரிம40,000 நிதியளிக்கப்பட்டது.

“இந்த ஒதுக்கீடு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், பினாங்கில் தாய்மொழிக் கல்வி தொடர்வதற்கான ஆதரவையும் வலுப்படுத்துகிறது,” என்று பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினரும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் விளக்கமளித்தார்.

அதற்கு முன்னதாக பேசிய பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி சிறப்புக் குழுவின் தலைவரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான சுந்தராஜூ, 2025 ஆம் ஆண்டிற்கான மீதமுள்ள வருடாந்திர ஒதுக்கீடான, ரிம249,900 தொகையை சிறப்பு நிதியாகப் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
“இந்நிதி அவசர தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும். உதாரணமாக, அண்மையில், இராஜாஜி தமிழ்ப்பள்ளியில் கடுமையான மழையால் ஏற்பட்ட கூரை சேதத்தை உடனடியாக பழுது பார்க்க முடிந்தது,” என விளக்கமளித்தார்.
“அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் வழங்கப்படும் நிதியுதவியை ஆற்றல், நேர்மை மற்றும் நிபுணத்துவத்துடன் பயன்படுத்த வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ரிங்கிட்டும் சரியான நோக்கத்துடன் செலவழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
“இந்த ஆண்டு மலேசிய தெலுங்கு சங்கத்திற்கு அவர்களின் கல்வி மையத்தில் தெலுங்கு மொழி வகுப்புகளை நடத்துவதற்காக ஒரு முறை வழங்கும் உதவித்தொகையாக ரிம20,000 மதிப்புள்ள உதவித்தொகையை நாங்கள் வழங்குகிறோம்,” என்று பிறை சட்டமன்ற உறுப்பினருமான அவர் விளக்கமளித்தார்
இந்த விழாவில், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினரும், பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளி சிறப்புக் குழுவின் துணைத் தலைவருமான குமரன், கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங் மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் பிரதிநிதிகளும் நிதியுதவி வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கொன் இயோவ், தற்போதைய தனது நிர்வாகம் ஆண்டுதோறும் வழங்கப்படும் சுமார் ரிம2.42 மில்லியன் நிதியை தொடர்ந்து வழங்க விரும்புவதாகவும், இந்த நிதிக்கான விண்ணப்பப் பயன்பாட்டை விரிவுப்படுத்தி, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT), மேக்கர் ஆய்வுக்கூடங்கள் (maker labs) அல்லது கணினி ஆய்வுக்கூடங்கள் போன்ற வசதிகளை உருவாக்கும் திட்டங்களை, பள்ளிகளின் தேவைக்கேற்ப அமைத்துக் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
“இந்த நிதியுதவி திட்டம் 16 வருடங்கள் செயல்பட்ட பின்னர், ரிம3 மில்லியனுக்கு மேலாக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டை கோரிய பள்ளி பிரதிநிதிகள் மூலம் ICT வசதிகள் மேம்படுத்தும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.