பொங்கல் விழா தமிழர்களிடையே நல்லிணக்கத்தைப் பேணுகிறது – முதல்வர்

Admin

பிறை – பத்து காவான் நாடாளுமன்ற சேவை மையம் மற்றும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் ஏற்பாட்டில் 10வது முறையாக நடைபெற்ற பொங்கல் விழாவில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கலந்து கொண்டார்.

இந்திய சமூகத்தினர் தமிழ் நாள்காட்டியில் வரும் ‘தை’ மாதத்தின் முதல் நாளை அறுவடை நாளாகவும் ‘பொங்கல்’ பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர். இதனை தமிழர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

“இஸ்லாம் நமது நாட்டின் அதிகாரப்பூர்வமான மதம் என்றாலும், கூட்டரசு அரசியலமைப்பு மற்ற மதங்கள் மற்றும் அதன் கலாச்சார நடைமுறைகளின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

“60 ஆண்டுகளுக்கும் மேலான சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு இதுவே நமது பலம்.

“நாம் ஒவ்வொருவரின் மதத்தையும் மதிக்கிறோம்,” என்று ஆலய மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்ட பிறகு சாவ் தனது உரையில் இவ்வாறு கூறினார்.

இன்றைய பொங்கல் விழாவில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டு, பொங்கல் சமைக்கும் போட்டி, குழந்தைகளுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, கோலம் வரைதல் போன்ற போட்டிகளில் பங்கேற்றது பாராட்டக்குரியது, என்றார்.

“பினாங்கு ஒரு அற்புதமான மாநிலம் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (அரசு சாரா நிறுவனங்கள்) செயல்படுவது வரவேற்கத்தக்கது என முதல்வர் கூறினார்.

“மாநில அரசாங்கம் பொது மக்களின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியைக் கொண்டுவருவதற்கானத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும்.

மாநில முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி கூறியதற்கு ஆதரவு அளித்து, ஆலயத்திற்கான வாகன நிறுத்துமிடம் 9 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுவதற்கு மாநில அரசு தன்னால் முடிந்த உதவியை வழங்கும், என்றார்.

மேலும், ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய வாகன நிறுத்திமிட நிர்மாணிப்புத் திட்டம் செயல்படுத்த இன்னும் சில அரசு துறைகளிடம் இருந்து அனுமதிப் பெற வேண்டியுள்ளது, என தலைவர் சேகரன் தெரிவித்தார்.

தைப் பிறந்தால் பொங்கல் விழா, தைப்பூசம் என இந்தியர்களின் பண்டிகைகள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அனைவரும் ஒன்றிணைந்து இந்த விழாக்களைக் கொண்டாட வேண்டும் என பேராசிரியர் ப.இராமசாமி வலியுறுத்தினார்.

ஆண்டுதோறும், ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர், வழிபாட்டு இல்லங்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGO) மற்றும் பிற மையங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டு ரிம78,000 நிதிக்கான காசோலைகளை அரசு சாரா நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் நன்கொடையாக வழங்குகிறது.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் ஒன்பது அரசு சாரா நிறுவனங்களுக்கு காசோலை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பிறை தோட்டம், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில்,(ரிம30,000);
பினாங்கு இந்து சங்கம் (ரிம12,000);
மாணவர் உதவி மானியம் (12 மாணவர்களுக்கு ரிம12,000); நிபோங் திபால், கிரியான் புக்கிட் பஞ்சோர் தேவி ஸ்ரீ மஹா காளியம்மன் பக்தர்கள் சங்கம் (ரிம10,000); இந்துதர்ம மாமன்றம் (மகளிர் பிரிவு,
புக்கிட் மெர்தாஜம்) (ரிம5,000);
இந்துதர்ம மாமன்றம் (பினாங்கு) (ரிம5,000); மலேசிய இந்து சங்கம், பினாங்கு மாநில பேரவை ரிம5,000 மலேசிய இந்து சங்கம், செபராங் ஜெயா பேரவை (ரிம1,000);பிறை இடைநிலைப் பள்ளி (ரிம3,000) ஆகியோர் காசோலையைப் பெற்றுக் கொண்டனர்.

ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய முன்னாள் தலைவரும், தற்போது ஆலய அறங்காவலருமான டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன், இந்திய சமூகத்திற்கு சிறந்த சேவையாற்றிய சேவையாளர்களை நினைவுக்கூர்ந்தார். அவ்வகையில், பினாங்கு இந்து சங்கத் தலைவர் பி.முருகையா மோகன்; பொது பஜனை குழுவைச் சேர்ந்த டி. இராமச்சந்திரன் மற்றும் இந்து தர்ம மன்றத்தைச் சேர்ந்த இராஜலட்சுமி மற்றும் ஓய்வுபெற்ற மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கே.இராஜமாணிக்கம் ஆகியோருக்கு மாநில முதல்வர் ஆலயம் சார்பில் விருது வழங்கி கெளரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் மு.சத்தீஸ், ஆலயத் துணைத் தலைவர் வீரையா, எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் டேவிட் மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.