பாயான் லெப்பாஸ் – செத்தியா ஸ்பைஸ் மாநாட்டு மையத்தில் மூன்று நாட்களுக்கு நடைபெறும் 32வது ‘மலேசிய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கத்தின் (OGSM) அனைத்துலக மாநாடு’ நிகழ்ச்சியில் மலேசியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 800 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில், தொழில்துறை நிபுணர்களிடையே நெட்வொர்க்கிங் பகிர்ந்து கொள்வதற்கான மதிப்புமிக்க தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொடக்க விழாவில் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதாரக் ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் தாய்மை மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைவரிடைய
அறிவியல், ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கம் மூலம் நிபுணத்துவப் பகிர்வு இடம்பெற்றது என கூய் கூறினார்.
“இந்த மாநாடு சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் மற்றும் ஆராய்ச்சிகளைப் பற்றி விவாதிப்பதற்கு மட்டுமல்லாமல், தற்போதைய சவால்களை முன்னிலைப்படுத்தவும் ஒரு தளமாக செயல்படுகிறது.
“தாய்மை சுகாதாரத்தை மேம்படுத்துதல், கருவுறுதல் பிரச்சனைகளை நிவர்த்தி செய்தல், பராமரிப்புக்கான அணுகலை மேம்படுத்துதல் மற்றும் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஆராய்தல் ஆகியவை இதில் அடங்கும்,” என்று கூய் நிகழ்ச்சியில் தனது உரையின் போது கூறினார்.
அதுமட்டுமின்றி, பினாங்கு மருத்துவமனையில் மூன்று பெரிய சுகாதாரத் திட்டங்கள் செயல்படுத்த மத்திய அரசு ரிம758 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூய் பகிர்ந்து கொண்டார்.
“இதில் புதிய மகளிர் மற்றும் குழந்தைகள் கட்டிடத்திற்கு ரிம307 மில்லியன், பிரத்தியேக
‘stem cell’ சேவை கட்டிடத்திற்கு ரிம23 மில்லியன் மற்றும் புதிய நிபுணத்துவ கிளினிக் மற்றும் பிரிவு ரிம428 மில்லியன் ஆகியவை அடங்கும்.
“இந்த குறிப்பிடத்தக்க முதலீடுகள், பினாங்கில் உள்ள மகளிர், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், உயர்தர பராமரிப்பை வழங்குவதற்கும் தேசிய மற்றும் மாநில அளவில் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக OGSM இன் ஏற்பாட்டுக் குழுவினர், சுகாதார அமைச்சு, ஆதரவாளர்கள் மற்றும் துணை கூட்டாளர்களுக்கும் கூய் தனது நன்றியைத் தெரிவித்தார்.
“பல திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் மூலம் மகளிரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான OGSM இன் உறுதிப்பாட்டை பாராட்டுகிறேன்,” என்று கூய் கூறினார்.
இதற்கிடையில், OGSM தலைவரான டாக்டர் ஆர்.எம். உடையார், இந்த மாநாடு ஒரு வருடாந்திர கூட்டமாக மட்டுமின்றி இது கல்வி, புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்புக்கானக் கூட்டு அர்ப்பணிப்பின் கொண்டாட்டமாகும்.
“அடுத்த சில நாட்களில், புதிய ஆராய்ச்சிகளை ஆராய்வோம்; அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்போம்; எங்கள் தொழில் நிபுணத்துவம் குறித்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.

“இந்த ஆண்டின் கருப்பொருள், ‘பன்முகத்தன்மை மற்றும் ஊக்கமளிக்கும் மாற்றத்தைத் தழுவுதல்’ ஆகும். இது நோயாளியை மையமாகக் கொண்ட பராமரிப்புடன் அறிவியல் முன்னேற்றத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது”, என்றார்.
இம்மாநாட்டில் 80-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை மகப்பேறியல், மகளிர் மருத்துவம், மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் மகளிர் ஆரோக்கியம் ஆகியவற்றில் பல்வேறு வகையான கருவிகள், சேவைகள் மற்றும் புதுமைகளைக் காட்சிப்படுத்துகின்றன.
இந்த நிகழ்ச்சியை பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகம் (PCEB), சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரத்திற்கான மாநில அலுவலகம் (PETACE) மற்றும் பினாங்கு2030 குழுவினர் உள்ளிட்ட பல அரசு அமைப்புகளால் ஆதரிக்கப்படுகின்றன.