மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களை திறமையாக செயல்படுத்தும் மாநிலமாக பினாங்கு திகழ்கிறது – பிரதமர்

Admin
img 20250719 wa0026

புக்கிட் தம்புன் – பிரதமர் டத்தோஸ்ரீ உத்தாமா அன்வார் இப்ராஹிம், பினாங்கு மாநில அரசு, மாநிலத்தில் மக்களுக்கான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆற்றிய செயல்திறனைப் பாராட்டினார்.

தெராதாய் மடானி திட்டத்தை உதாரணமாகக் கொண்டு, பினாங்கு மாநில அரசு, மாநில உள்ளாட்சி அமைப்புகள் (PBT) மூலம், திட்டத்திற்கான ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்துவதன் மூலம் சிறந்த ஒத்துழைப்பை நல்கியதாக அன்வார் கூறினார்.
img 20250719 wa0030

“இன்று, பினாங்கு மாநில அரசுக்கு நான் பாராட்டுத் தெரிவிக்க விரும்புகிறேன்.

“வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பிறவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதில் மிகவும் திறமையான ஒரே மாநிலம் பினாங்கு மாநில அரசாங்கம் தான்… இது ஒரு சாதனை,” என்று அவர் பத்து காவான் அரங்கம் அருகில் நடைபெற்ற தேசிய அளவிலான 2025 ஒற்றுமை வாரக் கொண்டாட்ட தொடக்க விழாவில் தனது உரையின் போது இவ்வாறு கூறினார்.
img 20250719 wa0034

இந்நிகழ்ச்சியில், மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆரோன் அகோ டகாங், செனட்டரும் ஒற்றுமை துணை அமைச்சருமான சரஸ்வதி கந்தசாமி, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பரிவு மிக்க அரசாங்கமாக, ஜூரு முதல் சுங்கை டுவா வரையிலான உயர்மட்ட நெடுஞ்சாலைத் திட்டம் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களுக்கு தனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அன்வார் கூறினார்.
img 20250719 wa0027

“இந்தத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை, பில்லியன் கணக்கான ரிங்கிட்டை எட்டுகிறது. எனவே, வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (PLUS) உடன் இதைப் பற்றி விவாதித்துள்ளோம், அங்கீகரிப்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.

“நான் அதை அங்கீகரிக்கும்போது, இந்தத் திட்டம் இந்த ஆண்டு (2025) செயல்படுத்தப்பட வேண்டும், மேலும் நானே அடித்தளம் நாட்டு விழாவை நடத்த வருவேன்” என்று அவர் கூறினார்.
img 20250719 wa0032
அதே உரையில், நீண்ட காலமாக இருந்து வரும் இனங்களுக்கு இடையிலான அமைதி மற்றும் ஒற்றுமையைப் பாதுகாக்க அனைத்து தரப்பினரையும் அன்வார் வலியுறுத்தினார்.

எனவே, மக்களிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஒற்றுமை அமைச்சிடம் கூடுதலாக ரிம10 மில்லியன் ஒதுக்கீட்டை அவர் அறிவித்தார்.

மலேசியாவிலும் உலக ரீதியிலும் சமூக ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு எடுத்துக்காட்டாக பினாங்கு மாநிலம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் நம்பிக்கை தெரிவித்தார்.

“பினாங்கில் பல இனம், மதம் மற்றும் கலாச்சாரங்களைப் பின்புலமாகக் கொண்ட பொது மக்கள் அமைதி, ஒற்றுமை மற்றும் புரிதலுடன் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.

“நாங்கள் வேறுப்பட்டாலும் எங்கள் அன்பான தாய்நாட்டிற்காக நாங்கள் ஒற்றுமையாக வாழ்கிறோம்,” என்று அவர் கூறினார்.

பினாங்கு மாநில அரசாங்கம், கிராம சமூக மேலாண்மை கவுன்சில்களை (எம்.பி.கே.கே) நியமிப்பதன் மூலம் சமூக மேம்பாட்டை உறுதிசெய்கிறது என்று அவர் கூறினார். இந்த கவுன்சில்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும், அறிவாற்றலுடனும், பல்வேறு தரப்பு மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன.

எனவே, இம்மாநிலத்தில் மொத்தம் 375 எம்.பி.கே.கே நியமிக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் தீவிரமாக சேவைகளை வழங்கி வருவதாக அவர் கூறினார்.

“இதற்கிடையில், ஒவ்வொரு மாநில சட்டமன்ற உறுப்பினர் அவர் தம் சேவை மையம் மூலம் மாநில அரசுக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் இடையே ஒற்றுமைக்கான ஊடகமாக இருப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

“மாநில அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தோர் உறுப்பினர்களாக உள்ளனர். இது ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதில் மாநில அரசின் உறுதிப்பாட்டிற்கு சான்றாக திகழ்கிறது,” என்று அவர் கூறினார்.

கொன் இயோவ் கூறுகையில், ஒற்றுமையின் மதிப்பை முன்னிலைப்படுத்தும் பினாங்கு மாநில அரசு, தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு துறை (JPNIN) வாயிலாக அடிமட்டத்தில் இருந்து சமூகத்தை பலப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

“இன்றுவரை, மாநிலத்தில் 527 ருக்குன் தெத்தாங்கா (KRT); 288 தன்னார்வ ரோந்துத் திட்டங்கள் (SRS); 116 ஒற்றுமை பாலர் பள்ளிகள்; 47 சமூக மத்தியஸ்தர்கள்; 368 ருக்குன் நெகாரா சங்கங்கள் மற்றும் ஐந்து ஒற்றுமை படைகள் உள்ளன, அவை சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் முன்னணியில் செயல்படுகின்றன.

இந்த வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, செபராங் பிறை முதல் தென்மேற்கு மாவட்டம் வரையிலும் இந்த ஒற்றுமை இயந்திரம் இம்மாநில மக்களின் அமைதி மற்றும் சமூக நல்வாழ்வுக்கு ஒரு உந்துசக்தியாக செயல்படுவதற்கான சான்றாகும்.

இந்த ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டு வார கொண்டாட்டத்தை தேசிய ரீதியில் ஏற்று நடத்துவதற்கு பினாங்கு மாநிலத்தைத் தேர்வு செய்ததில் பெருமைக் கொள்கிறேன். இதன்வழி, பினாங்கு மாநிலம் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பறைச்சாற்றி பாதுகாக்கப்படுவதை அங்கீகரிக்கிறது.

இதற்கிடையில், தேசிய ஒற்றுமை குறியீடு (IPNas) தற்போது மூன்றாவது முறையாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மலேசியர்களிடையே ஒற்றுமையின் அளவை பிரதிபலிக்கும் 0.7 மதிப்பெண்ணைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆரோன் அகோ கூறினார்.

“இந்த குறியீடு இனங்களுக்கிடையிலான உறவுகள், தேசிய அடையாளம் மற்றும் சமூக நம்பிக்கைகள் பற்றிய கருத்துக்கள் போன்ற முக்கியமான அம்சங்களை மதிப்பிடுகிறது.
இதனால் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான அமைச்சின் கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளை வகுப்பதில் முக்கிய குறியீடாகிறது,” என்று அவர் கூறினார்.

எனவே, அடுத்த ஆண்டு ஒற்றுமை வார கொண்டாட்டத்தை செயல்படுத்துவதை வலுப்படுத்த தேசிய ஒற்றுமை அமைச்சு ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.

“அறிமுகப்படுத்தப்படும் புத்தாக்க அணுகுமுறைகளில் “2 இன் 1” என்பது ஒற்றுமை வார கொண்டாட்டத்துடன் அந்தந்த மாநிலங்களின் இன சிறுபான்மை கலாச்சார விழாக்களைக் கொண்டாடுவதன் கலவையாக அமையும்.

“இந்த அணுகுமுறை இன சிறுபான்மையினரின் பாரம்பரியத்தை அங்கீகரிக்கிறது மற்றும் மலேசிய அடையாளத்தை உருவாக்கும் கலாச்சார பன்முகத்தன்மையை மக்கள் பாராட்ட இடமளிக்கிறது,” என்று அவர் கூறினார்.