ஜார்ச்டவுன் – பினாங்கில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களுக்கும் நிதிப் பிரச்சனையைக் குறைக்க, மாநில அரசாங்கம் 2026 ஆம் ஆண்டு முதல் நில வரிக்கு தள்ளுபடி முறையை அறிமுகப்படுத்துகிறது.
கடந்த 30 ஆண்டுகளாக நில வரி கட்டணம் திருத்தப்படாமல் இருப்பதால், புதிய நில வரிக்கான கட்டணம் மறுஆய்வு செய்வது அவசியம் என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

“புதிய கட்டண வரி வருகின்ற 2026 ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும், இது பினாங்கில் கிட்டத்தட்ட 370,000 நில உரிமையாளர்களை உள்ளடக்கியது.
2026 ஆம் ஆண்டில் 32.5% நில வரி தள்ளுபடி செயல்படுத்தப்படும் என்றும், அதைத் தொடர்ந்து 2027 மற்றும் 2028 ஆகிய இரண்டு ஆண்டிலும் 20% தள்ளுபடி வழங்கப்படும், என்றார்.
நில வகை அல்லது பயன்பாட்டைப் பொருட்படுத்தாமல், மாநிலத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களுக்கும் இந்தத் தள்ளுபடி பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.

“இந்த திருத்தப்பட்ட கட்டண முறை 2024 இல் தேசிய நில கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டன. மேலும் எதிர்கால மதிப்பாய்வுகள் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
“இதன் பொருள் புதிய நில வரி கட்டணம் குறைந்தது ஒரு தசாப்தத்திற்கு மாறாமல் இருக்கும்,” என்று சாவ் விளக்கமளித்தார்.
இந்த திருத்தம் 300,000 அடுக்குமாடி ஸ்ட்ராத்தா கணக்குகளைப் பாதிக்காது என்றும், அவை தற்போதுள்ள அடுக்குமாடி ஸ்ட்ராத்தா வரி விகிதங்களின்படி தொடர்ந்து செலுத்தப்படும் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

“இந்த நீண்ட தாமதம் மாநில அரசின் நில வரி வருவாயை அதிகரிப்பதற்குத் தடையாக அமைந்தது.
“இருப்பினும், தள்ளுபடிக்குப் பிறகு செலுத்த வேண்டிய தொகை 2025 இல் செலுத்தப்பட்டதை விடக் குறைவாக இருந்தால், தள்ளுபடிக்குத் தகுதிபெறும் நில உரிமையாளர்கள், முன்னதாக செலுத்திய வரி விகிதத்தையே தொடர்ந்து செலுத்த வேண்டும்.
“இதனிடையே, இந்த தள்ளுபடி வழங்கப்படுவதால் 2026 முதல் 2028 வரை பினாங்கு அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் ரிம80 மில்லியன் முதல் ரிம100 மில்லியன் வரை வருவாய் பற்றாக்குறையை ஏற்படுத்தும்,” என்று இன்று கொம்தாரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சாவ் கூறினார்.
மேலும், மூன்று வருட தள்ளுபடி திட்டத்தைத் தவிர, பினாங்கு நில உரிமையாளர்களுக்குப் பல கூடுதல் சலுகைகளை வழங்க மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சாவ் செய்தியாளர்களிடம்
“இதில், 2026, ஜனவரி,1 முதல் டிசம்பர்,31 வரை வாடகையின் நிலுவைத் தொகை மற்றும் அடுக்குமாடி ஸ்ட்ரத்தா வரிகளுக்கான அபராதக் கட்டணங்களுக்கான முழுமையான விலக்கு வழங்கப்படும்.
“சுமார் ரிம25 மில்லியன் விலக்கு அளிக்கப்படுவதன் மூலம், நில உரிமையாளர்கள் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்த ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“தொடர்ந்து, விவசாய பயன்பாட்டிலிருந்து குடியிருப்பு பயன்பாட்டிற்கு நில மாற்ற கட்டணத்திற்கு 50% தள்ளுபடி வழங்கப்படும். (இது தனிநபர் வீட்டுவசதிக்கு மட்டும், திட்டமிடல் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது).
“2026 ஆம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் இந்த ஊக்கத்தொகை, நியமிக்கப்பட்ட மேம்பாட்டு மண்டலங்களில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள், விவசாய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, ஏற்கனவே வீடுகள் கட்டப்பட்ட இடங்களை மாற்ற உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
இது நில உரிமையாளர்கள் தங்கள் சொத்து மற்றும் தனியார் குடியிருப்புகளின் மதிப்பை அதிகரிக்க உதவும் என்று சாவ் விவரித்தார்.
“மூன்றாவது ஊக்கத்தொகை, PG Land விண்ணப்பம் மூலம் ஆன்லைனில் வாடகையை பணம் செலுத்தும் மற்றும் அடுக்குமாடி ஸ்ட்ராத்தா வரி செலுத்துவோருக்கு வெகுமதிகள் மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கல் வழங்கப்படும்.
“இந்த நடவடிக்கை நில உரிமையாளர்களிடையே டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.
அதே செய்தியாளர் சந்திப்பில், செப்டம்பர் 11, 2025 தேதியிட்ட பினாங்கு மாநில வர்த்தமானி எண். 37 இல் வெளியிடப்பட்ட தேசிய நிலச் சட்டத்தின் (சட்டம் 828) பிரிவு 101 இன் கீழ் மாநிலம் முழுவதும் புதிய நில வரி விகிதங்களை பினாங்கு அரசாங்கம் வெளியிட்டுள்ளதாகவும் சாவ் அறிவித்தார்.