மாநில அரசு சீக்கியர் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்க ரிம100,000 மானியம்

Admin

ஜார்ச்டவுன் – மாநில அரசு சீக்கியர் சமூகம் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும்  சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் ரிம100,000 மானியம் வழங்குகிறது.

“பல்லின மக்கள் வாழும் இம்மாநிலத்தில் சீக்கியர் சமூகம் சிறுபான்மையினராக இருந்தாலும் மாநிலத்தின் வள்ர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு நல்குகின்றனர்.

சீக்கியர் சமூகப் பங்களிப்பு வரவேற்கத்தக்கது,” என்று மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

“இந்த குருத்வாரா ஆலய மறுசீரமைப்புப் பணிகளை நேரில் சென்று பார்வையிடுவதில் மகிழ்ச்சிக் கொள்கிறேன். பினாங்கு மாநில பிற குருத்வாரா ஆலயங்களுக்கும் உதவிகள் நல்கப்படும்.

“கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தின் போதும் குருத்வாரா ஆலய நிர்வாகத்தினர்  பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினர்.  அண்மையில் சிலாங்கூர் மற்றும் பகாங் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்குத் தேவையானப் பொருட்கள் சேகரித்து வழங்கியதோடு நிதி திரட்டும் பணியிலும் ஈடுப்பட்டது பாராட்டக்குரியது.

மாநில முதல்வர், புத்தாண்டை வரவேற்கும் அனைத்து சீக்கியர்களுக்கும் இனிய வைசாக்கி நல்வாழ்த்துகளும்,   தமிழர்களுக்கு இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகளும் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் வீடமைப்பு, உள்ளாட்சி, கிராமம்  மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ; வாடா குருத்வாரா சாயிப் ஆலய ஆலோசகர் டத்தின் ஸ்ரீ உத்தாமா குர்மிட்  கவுர்; வாடா குருத்வாரா ஆலய மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு தலைவர் டத்தோ ஸ்ரீ மஹிண்டர் சிங்;  குருத்வாரா ஆலயத் தலைவர் சந்தோக் சிங் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

“பினாங்கு மாநில அரசாங்கம் அனைத்து இன மக்களையும் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாரபட்சம் இன்றி உதவுவது பாராட்டக்குரியது. இந்த வாடா குருத்வாரா ஆலய கட்டடிம் 121 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாரம்பரியக் கட்டிடமாகும். இது பாரம்பரியக் கட்டிடம் என்பதால் அதனை மறுசீரமைப்பு செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டிடக்  கூறுகள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

“1901 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த குருத்வாரா ஆலயத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணிகள் ரிம5.9 மில்லியன் நிதி செலவில் கட்டப்படுகிறது. இந்த மேம்பாட்டுப் பணிகள்  18-24 மாதங்களில் நிறைவுப்பெறும்,” என்று எதிர்ப்பார்ப்பதாக ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் தெரிவித்தார்.

இந்த மறுசீரமைப்புப் பணிக்கு ரிம50,000 மானியம் வழங்குவதாக ஜெக்டிப் தெரிவித்தார்.

1699 ஆண்டில் 10வது குருவான கோவிந்த் சிங் ஜி அவர்களால் கல்சாவின் பிறப்பு அல்லது தோற்றத்தை நினைவுக்கூறும் நன்னாளாக வைசாக்கி திகழ்கிறது.