லிட்டல் இந்தியா பிரமாண்ட நுழைவாயில் திறப்பு விழாக் கண்டது – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – பொங்கல் என்பது உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும். விவசாயம் மற்றும் நல்ல விளைச்சலுக்கு முதன்மை ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி மற்றும் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் இவ்விழா பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.

தை மாதத்தின் முதல் நாள் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைவருக்கும் சிறந்த தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்நாளில் நாம் தொடங்கும் அனைத்து காரியங்களும் பயனுள்ள மற்றும் வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.

பினாங்கு மாநிலத்தில் மத சுதந்திரமும் நமது சமூகத்தின் ஒற்றுமையும் பாதுகாக்கப்படுகிறது.
இது பொருளாதார மேம்பாட்டுக்கு அடிப்படைக் கோட்பாடாகக் கருதப்படுகிறது

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், பினாங்கு மாநில மலேசிய இந்தியர் வர்த்தகத் தொழிலியல் சங்கம்(MICCI)
ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.

“இன்று நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டம், லிட்டல் இந்தியா சமூகத்தின் பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது,” என்று முதல்வர் தமதுரையில் குறிப்பிட்டார்.

மேலும், பினாங்கு வர்த்தகத் தொழிலியல் சங்கம் இனம், கலாச்சாரம் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து சமூகங்களிலிருந்தும் தேவைப்படுபவர்களுக்கு நிதியுதவி மட்டுமின்றி கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான அதன் முன்முயற்சிகளை வருகின்ற ஆண்டுகளிலும் தொடரும் என்று சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.

பினாங்கு இந்தியர் வர்த்தகத் தொழிலியல் சங்கம் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம், இளைஞர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இந்திய வணிகச் சமூகத்திற்கான சிறு தொழில் முனைவோர் வழிகாட்டி மற்றும் விழிப்புணர்வு பட்டறைகள் உட்பட பல நிகழ்ச்சிகளை இந்திய சமூக மேம்பாட்டு வளர்ச்சிக்காக ஏற்பாடு செய்வது பாராட்டக்குரியதாகும்.

“பினாங்கு மாநில அரசு பினாங்கு இந்திய வர்த்தகத்துடன் இணைந்து தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்கும் பினாங்கு2030 தொலைநோக்கு பார்வையை மெய்ப்பிக்கவும் மேலும் இம்மாநில வாழ் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்,” என பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான சாவ் குறிப்பிட்டார்.

இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தின் போது, லிட்டல் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட நுழைவாயில் கடந்த ஆண்டு(2022) நவம்பர் 30-ஆம் தேதி நிறைவுப்பெற்று இன்று அதிகாரப்பூர்வத் திறப்புவிழாக் காண்கின்றது.

பீச் ஸ்ட்ரீட் மற்றும் மார்க்கெட் ஸ்ட்ரீட் சாலைக்கு இடையில் பிரமாண்டமான நுழைவாயில் நிர்மாணிக்கும் திட்டம் MICCI பரிந்துரைக்கு ஏற்ப, பினாங்கு மாநில அரசு மற்றும் பினாங்கு மாநகர் கழக உதவியுடன் 2018 ஆம் ஆண்டில் இந்த கட்டிடத் திட்டம் முன்மொழியப்பட்டு சுமார்
ரிம 588,226.40 செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மார்க்கெட் ஸ்ட்ரிட் சாலை மேம்படுத்தும் பணியும் ரிம405,555.00 செலவில் மேம்படுத்தப்பட்டது.

இந்திய மற்றும் இஸ்லாமிய கலை அம்சங்களைக் கொண்டு இந்த பிரமாண்ட நுழைவாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது, பாராட்டக்குரியதாகும். இது போன்ற முயற்சிகள் ஜார்ச்டவுனின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் அழகை உள்ளூர் சுற்றுப்பயணிகள் மட்டுமின்றி அனைத்துலக சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.

இந்தப் பிரமாண்ட நுழைவாயில் இந்தியர்களின் அடையாளமாகத் திகழும் என்று பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தமதுரையில் புகழாரம் சூட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மூன்று கரும்புகளை பிரமிட் வடிவத்தில் நிறுத்தி அதில் மண் பானையை வைத்து 30 பேர்கள் கொண்ட குழுவில் பொங்கலைக் கொண்டாடினர். இது குழு முறையில் போட்டியாகவும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனிடையே, கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங்; எம்.பி.பி.பி செயலாளர் டத்தோ இராஜேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள், பினாங்கு லீகா முஸ்லிம் உறுப்பினர்கள், சீனர் வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

பினாங்கு இந்திய வர்த்தகத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் இச்சங்கத்தின் அனைத்து நடவடிக்கை மற்றும் திட்டங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் மாநில அரசிற்கு நன்றித் தெரிவித்தார்.