ஜார்ச்டவுன் -பினாங்கு மாநில அரசாங்கம் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்திய ‘ஃபெரி’ முத்திரை (Cap Feri) அரிசி பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற வேளாண் மடானி விற்பனை (Jualan Agro MADANI) கார்னிவலில் இந்த அரிசி, இரண்டு மணி நேரத்திற்குள் முழுமையாக விற்று முடிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச்,20 ஆம் தேதி நிலவரப்படி, 80 மெட்ரிக் டன் எடையுள்ள மொத்தம் 16,000 அரிசி மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாநில வேளாண் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் ஃபஹ்மி ஜைனோல் தெரிவித்தார். இந்த விற்பனையின் மூலம் ரிம272,000 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற பினாங்கு மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, இந்தத் திட்டத்தின் செயல்திறன் குறித்து செபராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் இஷார் ஷா ஆரிஃப் ஷா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பந்தாய் ஜெரெஜாக் சட்டமன்ற உறுப்பினருமான ஃபஹ்மி, ஃபெரி முத்திரை அரிசி, மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் (FAMA), விவசாயிகள் அமைப்பு ஆணையம் (LPP) மற்றும் மலேசிய மீன்வள மேம்பாட்டு ஆணையம் (LKIM) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்படும் வேளாண் மடானி விற்பனை நிகழ்ச்சிகளில் விநியோகிக்கப்படுகிறது, என்றார்.
ஃபெரி முத்திரை அரிசி
5 கிலோ ரிம16 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். தற்போது சந்தையில் கிடைக்கும் மிகவும் மலிவான தரமான அரிசி வகைகளில் ஒன்றாக உள்ளது.
இந்த அரிசி குறிப்பாக B40 வருமானக் குழுவை குறி வைத்து வழங்கப்படுகிறது. அறிமுகமாகிய முதல் மூன்று மாதங்களில் மட்டுமே, இது சுமார் 48,000 நபர்களுக்கு பயனளித்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
“இந்த நிகழ்ச்சிகளில் அரிசி ஒரு நட்சத்திரப் பொருளாக மாறியுள்ளது, ஒவ்வொரு இடத்திற்கும் பொதுவாக குறைந்தது 500 பொட்டலங்கள் ஒதுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் வழக்கமாக இரண்டு மணி நேரத்திற்குள் விற்கப்பட்டுவிடும்,” என்று முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் பிரதிநிதித்துப் பேசிய ஃபஹ்மி கூறினார்.
இந்த முயற்சி இன்னும் சோதனை கட்டத்தில் இருப்பதாகவும், உள்ளூர் அரிசி விநியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறைக்கு தற்காலிக தீர்வாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
“தரமான, மலிவான அரிசிக்கு குறைந்த வருமானக் குழுமத்தில் இருந்தவர்கள் மத்தியில் தெளிவான தேவை இருப்பதை வலியுறுத்துகிறது,” என்று அவர் கூறினார்.
நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக முறையான பொது திருப்தி கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை என்றாலும், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் இன்னும் விரிவான கண்காணிப்பு முறையை செயல்படுத்த மாநில அரசு உத்தேசிக்கும் என்று ஃபஹ்மி மேலும் விளக்கமளித்தார்.