ஜார்ச்டவுன் – பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சிப் பணியகம் (PCEB) இந்தியா சுற்றுலா சந்தையை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மேலும் இந்தியா பயணிகளிடையே சுற்றுலா மற்றும் வணிக நிகழ்ச்சிகளுக்கு உகந்த இடமாக பினாங்கை நிலை நிறுத்த பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றது.
இதில் நிலையான சுற்றுலா தலமாக உருவாக்க ஊக்குவிப்பு, நுழைவு செயல்முறைகளை எளிதாக்குதல் மற்றும் இண்டிகோ நேரடி விமான சேவை, வணிக பரிமாற்றம், பயண சங்கங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுடன் கூட்டாண்மைகளை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
பினாங்கு இந்தியா சாலைப்பயணம் (PRTI) என்பது, பினாங்கு சுற்றுலா செயல்பாடுகளை இந்திய நாட்டுப் பயண முகவர்களுடன் இணைப்பதற்காக, இதற்கு முன்பு இந்தியாவின் ஐந்து நகரங்களில் நடைபெற்றது. மேலும், 2024 டிசம்பரில் தொடங்கிய இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னை-பினாங்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தியது. இது சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற விளம்பர நடவடிக்கைகளால் ஆதரிக்கப்பட்டது.
“மேலும், இண்டிகோ விமான ஏர்லைன்ஸ் நிறுவனமும் பினாங்கு சுற்றுலா காணொலியை வெளியிட்டது; ஒரு பிரபலமான மலேசிய கலைஞரைக் கொண்ட தமிழ்-ஆங்கில பதிப்பும் விரைவில் வெளியிடப்படும்,” என்று பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய் மாநில சட்டமன்றக் கூட்டத்தின் போது பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் கேட்ட வாய்வழி கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
முகவர் பயிற்சி மற்றும் சுற்றுலா பயணங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs), தமிழ்நாடு விற்பனை கொள்கை, ஊடகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவு போன்ற பிற முயற்சிகளையும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விரிவாகக் கூறிய வோங், சென்னை-பினாங்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவிலிருந்து பினாங்குக்கு வருகை தரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது, என்றார்.
“2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், பினாங்கு அனைத்துலக விமான நிலையம் (PIA) வழியாக வருகை தரும் முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை.
“இருப்பினும், ஜனவரி முதல் மார்ச் 2025 வரை, இந்தியா 8வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
“2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2,417 ஆக இருந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5,045 ஆக உயர்ந்து, 108.73% அதிகரித்துள்ளது.
“இது ஒரு ஊக்கமளிக்கும் அறிகுறியாகும், மேலும் இந்த ஆண்டு முழுவதும் திட்டமிடப்பட்ட கூடுதல் மூலோபாய ஊக்கத்தொகைகள் மற்றும் சந்தைப்படுத்தல் முன்முயற்சி திட்டங்கள் மூலம், இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடியும்,” என்று வோங் நம்பிக்கை தெரிவித்தார்.