ஜார்ச்டவுன் – பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ உயர்க்கல்வி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் முன்முயற்சி திட்டத்தின் கீழ் தகுதியான 42 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் மற்றும் நிதியுதவியை வழங்கினார்.
இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 38 மாணவர்களுக்கு தலா ரிம1,800 மதிப்புள்ள புதிய மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. அதே வேளையில், மேலும் நான்கு மாணவர்களுக்கு ரிம1,000 முதல் ரிம1,500 வரை நிதியுதவி வழங்கப்பட்டது. மொத்தத்தில், இத்திட்டத்திற்கு ரிம70,000 நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினருமான சுந்தராஜு, தனது பிறை சட்டமன்றத் தொகுதி மட்டுமின்றி இம்மாநிலத்தின் பிற தொகுதியைச் சேர்ந்த எந்தவொரு மாணவரும் நிதிப் பிரச்சனை காரணமாக உயர்கல்வி தொடர்வதை நிறுத்திவிடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் உதவிச் செய்தார்.
அதுமட்டுமின்றி, பிற மாநிலத்தை சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கும் உதவிக்கரம் நீட்ட தயங்கவில்லை. ஏனெனில் சேவைக்கு எல்லை இல்லை” என்ற தன்னலமற்ற மனோபாவத்தோடு, பிற மாநிலங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கும் உதவிக்கரம் நீட்ட அவர் தயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“மடிக்கணினி என்பது இன்று ஓர் ஆடம்பர பொருளாக இல்லாமல், ஒரு அடிப்படைத் தேவையாக மாற்றம் கண்டுள்ளது. இந்த முன்முயற்சி திட்டத்தின் தொடர்ச்சியாக, 2024 ஆண்டு இறுதிக்குள் மேலும் 50 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 200 மாணவர்கள் இந்த திட்டத்தின் பயனாளிகளாக இருப்பார்கள் என உறுதியளித்தார்.
“எனது வாழ்க்கைப் பின்னணியில் வசதிக் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு வசதிக் குறைந்த பின்னணியில் இருந்து வருவதால் ஏற்படும் சவால்களையும், மேற்கல்வி தொடர முடியாமல் எதிர்நோக்கும் நிதிப் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டே இத்திட்டத்தை செயல்படுத்த உத்வேகம் கொண்டேன்.
“இத்திட்டத்தின் வாயிலாக வழங்கப்படும் மடிக்கணினிகள் மற்றும் நிதியுதவி மாணவர்கள் தங்கள் மேல்கல்வியைத் தொடங்குவதற்கும் எதிர்காலத்திற்கான திறவுக்கோலாகவும் அமையும்,” என்று கொம்தாரில் நடைபெற்ற இலவச மடிக்கணினிகள் உதவி திட்டம் வழங்கும் விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், செபராங் பிறை மாநகர் கழக கவுன்சிலர் பொன்னுதுரையும் கலந்து கொண்டார்.
2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் நிதியுதவி மூலம் ஆதரவளிக்க தனிப்பட்ட முறையில் கிட்டத்தட்ட ரிம300,000 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளேன். இத்திட்டம் அரசாங்க ஒதுக்கீட்டால் நிதியளிக்கப்படவில்லை, மாறாக எனது சுய சேமிப்பு மூலம் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது, என்றார்.
மாணவர்களுக்குக் கிடைக்கப்பெறும் மடிக்கணினிகள் மற்றும் நிதியுதவியைக் கொண்டு அவர்கள் மேற்கல்வி பயிலும் துறைகளில் சிறந்த தேர்ச்சிப் பெற்று எதிர்காலத்தில் சிறந்த பட்டதாரியாக உருவாக வேண்டும் என கூறினார்.
ஒரு நாள், நீங்கள் உயரும்போது மற்றவர்களையும் உயர்த்துவீர்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“ஓரு வாடகை கார் ஓட்டுநராக தொடங்கிய எனது வாழ்க்கைப் பயணத்தை, விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் போராடி ஒரு புகழ்ப்பெற்ற மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக வெற்றி நடைப்போட்ட வாழ்க்கை வரலாற்றை டத்தோ ஶ்ரீ சுந்தராஜு மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
ஒன்றிணைந்து, எந்தக் குழந்தையும் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதையும், ஒவ்வொரு மாணவரும், இனம், மதம் என்ற பின்னணியைப் பொருட்படுத்தாமல், வெற்றிபெற நியாயமான வாய்ப்பு வழங்கப்படுவதையும் உறுதி செய்வோம்.