சுங்கை புயூ – பினாங்கு மாநில முதலமைச்சரின் துணைவியாரும் முத்தியாரா மகளிர் அமைப்பு தலைவருமான தான் லீன் கீ, சுயமாக கொள்கலன்களைக் கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு விற்பனை விலையில் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
பாகான் அஜாம் பொதுச் சந்தை மறுசுழற்சி மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில், நெகிழிப்பை பயன்பாடு அற்ற பிரச்சாரத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
முத்தியாரா மகளிர் அமைப்பின் (PWM) தலைவருமான அவர், கடந்த ஆண்டு முதல், தனது அமைப்பு பொது மக்களுக்கு டிபன் கொள்கலங்களை விநியோகிப்பதன் மூலம் இந்தப் பிரச்சாரத்தில் உறுதியாக ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.

“2019 முதல், பினாங்கு மாநில அரசு, வளாகத்தில் நெகிழிப் பைகள், நெகிழி உறிஞ்சு குழல்கள் மற்றும் உணவுப் பாத்திரங்கள் உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டை கட்டுப்படுத்தி மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.
“கோவிட்-19 தொற்றுநோய் காலத்திலும் அதற்குப் பிறகும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப்பை பயன்பாடு அதிகரித்துள்ளதால், முத்தியாரா மகளிர் அமைப்பு கடந்த ஆண்டு (2024) முதல் பொதுமக்களுக்கு உணவு கொள்கலன்களை விநியோகிக்க முடிவு செய்துள்ளது.
“இந்த முன்முயற்சி திட்டம் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பை பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சமூகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளும் ஊக்குவிக்கப்படுகிறது,” என்று அவர் விளக்கமளித்தார்.
இந்த அரசு சாரா நிறுவனம் பொது மக்களுக்கு அடுக்கு உணவு கொள்கலன்களை விநியோகிக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்வது இது மூன்றாவது முறை என்று அவர் கூறினார்.
கூடுதலாக, சுங்கை புயு சட்டமன்ற உறுப்பினர், பீ சின் சீ அவர்களால் தொடங்கப்பட்டு, செபராங் பிறை மாநகர் கழகத்தால் (எம்.பி.எஸ்.பி) ஆதரிக்கப்படும் இந்தப் பிரச்சாரம், பாகான் அஜாம் பட்டர்வொர்த் பொதுச் சந்தையில் உள்ள உணவு விற்பனையாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் பங்கேற்பும் பெற்றால் இத்திட்டம் வெற்றிப் பெறும் என்று அவர் கூறினார்.
“இந்தப் பொதுச் சந்தையில் உள்ள உணவு விற்பனையாளர்கள், உள்ளூர் சமூக உறுப்பினர்கள் மற்றும் இந்தப் பொதுச் சந்தை வரும் பொதுமக்கள் அனைவரும், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பை அற்ற பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
” வாடிக்கையாளர்கள் உணவு வாங்க உணவுப் பாத்திரங்கள் அல்லது அடுக்கு கொள்கலன் கொண்டு வந்தால், இங்குள்ள அங்காடி வியாபாரிகள் தங்கள் உணவின் விலையிலிருந்து 0.50 சென் அல்லது ரிம1 கழிப்பதன் மூலம் இந்த பிரச்சாரத்தை ஆதரிக்கலாம்; அல்லது நியூ வேர்ல்ட் பூங்காவில் (பாடாங் கோத்தா அருகில்) உள்ள அங்காடி வியாபாரிகள் வாங்கப்பட்ட உணவின் அளவை அதிகரிக்க முன்வருவதைப் போல அவர்களும் செயல்படலாம்,” என்று அவர் விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியில், எம்.பி.எஸ்.பி மேயரைப் பிரதிநிதித்து அதன் செயலாளர் முகமட் இப்ராஹிம் முகமட் நோர் கலந்து கொன்டு உரையாற்றினார்.