ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) அண்மையில் பத்து லஞ்சாங் இந்து மயானத்தில் ஏற்பட்ட மயான நிலம் தொடர்பான சர்ச்சையில், நடப்பு நிர்வாகத்தின் கீழ் ஓர் இடம் இரண்டு நபர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என். இராயர், மேகலிஸ்டர் சாலையில் உள்ள வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடப்பு நிர்வாகம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
“நில குத்தகை சான்றிதழின் படி, குறித்த மயான இடம் முதலில் 2022 ஏப்ரல்,29 அன்று குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது என்றும், அதே இடம் 2023 பிப்ரவரி,7 அன்று மீண்டும் மற்றொருவருக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டதாகவும், இராயர் கூறினார்.
“இந்த இரு நில குத்தகை சான்றிதழும்
முன்னாள் தலைமைத்துவத்தின் கீழ் பணிபுரிந்த ஒரே அலுவலக உதவியாளரின் கீழ் வழங்கப்பட்டது,” என்று இராயர் விளக்கமளித்தார்.
இது தொடர்பான நில குத்தகை சான்றிதழ், இரசீது மற்றும் ஆவணங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
“இணையத்தில் வைரலாகி வரும் ஓர் ஆடியோவில், அந்த இடம் 2025 இல் மீண்டும் குத்தகைக்கு கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், நடப்பு PHEB ஆணையர்கள் 2023 ஆகஸ்ட்,23 அன்று பதவியேற்றனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த இராயர், ஒரே நிலத்தை மீண்டும் 2023 பிப்ரவரி,7 அன்று குத்தகைக்கு எடுத்த நபருக்கு பணத்தை திருப்பி வழங்க வாரியம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இதற்கிடையில், PHEB ஆணையர் டத்தோ ஜே. தினகரன், மயான நிலத்தை குத்தகைக்கு எடுத்த பொது மக்கள், மேக்கலிஸ்டர் சாலையில் உள்ள PHEB தலைமை அலுவலகத்தில் வந்து உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், PHEB, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க, மயான இடங்களுக்கு லோட் எண்கள் பதிவிடத் திட்டமிட்டுள்ளது என்று இராயர் தெரிவித்தார்.