ஜார்ச்டவுன் – நான்கு வயதில் மருத்துவராக வேண்டும் என்ற கெளரி மோகன் குமரப்பாவின் கனவு 31வது வயதில் நனவாகியது. இது கெளரியை விடுத்து, அவருக்கு ஆதரவு அளித்த ஊக்கத்தொகை திட்டத்திற்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக இந்த மருத்துவப் பட்டமளிப்பு விழா அமைகிறது.
டாக்டர் கெளரி நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது இலட்சியப் பாதையை அடைவதற்கு பல சவால்களைச் சந்தித்தார். இருப்பினும், அவரது ஊக்கமும், மன உறுதியும் ஒருபோதும் தளரவில்லை.
இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில், அவர் கெடாவில் அமைந்துள்ள ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்திலிருந்து மருத்துவப் பட்டம் (MBBS) பெற்றார்.
பினாங்கு கேப்டன் 88 சமூக நல சங்கம் பினாங்கு மற்றும் வடக்கு பகுதியைச் சேர்ந்த வசதிக் குறைந்த மாணவர்களின் திறன் மேம்பாட்டை வளர்க்கும் நோக்கத்தில் இச்சங்கத்தின் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பட்டம் பெற்ற முதன்மை மாணவியாக பினாங்கில் பிறந்து வளர்ந்த கெளரி, திகழ்கிறார்.
அரசு சாரா தொண்டு நிறுவனமாகத் தொடங்கப்பட்ட இந்த 88 கேப்டன் சங்கம், தகுதியான மாணவர்களுக்கு நிதியுதவி மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறது.
2023-ம் ஆண்டு, தனது மூன்றாவது ஆண்டுப் படிப்பின்போது, கெளரி கடுமையான நிதிச் சுமையை எதிர்கொண்டார். அப்போது, மாநில முதலமைச்சர் அலுவலகத்தின் பரிந்துரையின்பேரில் கேப்டன் 88 சங்கத்துடன் தொடர்புக் கொண்டு ஊக்கத்தொகைப் பெற்றதாக அறியப்படுகிறது.
“இன்று கொம்தாரில் முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவை மரியாதை நிமித்தமாக சந்தித்த கௌரி, தனது கனவின் மீது நம்பிக்கை வைத்த மாநில அரசாங்கத்திற்கும் பினாங்கு கேப்டன் 88 சமூக நல சங்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தச் சங்கத்தின் மூலம் ரிம20,000 ஊக்கத்தொகைப் பெற்றேன்.
2025 ஜூன் 21ஆம் தேதி, அவர் அதிகாரபூர்வமாகப் பட்டம் பெற்றார். இந்த தேதி, அவரது வாழ்க்கையில் மட்டுமல்லாது, திறமைகளை ஊக்குவிக்கும் 88 கேப்டன் சங்கத்தின் இலக்கையும் பிரதிபலிக்கும் பொன்னாளாக விளங்குகிறது.
கௌரி நிதி நெருக்கடியைச் சந்தித்தப் போதிலும், விடாமுயற்சியுடன் பல பகுதிநேர வேலைகளைச் செய்தார், குறிப்பாக சிறு வியாபாரம், ஈ-ஹெய்லிங் ஓட்டிநராகவும் வலம் வந்து பணத்தைச் சேமித்து தனது இலட்சியத்தை நோக்கிப் பயணித்தார்.
“எனது அன்பிற்குரிய பெற்றோர், பல நல்லுள்ளங்கள், அரசு சாரா நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டி எனது கனவை எட்டிப் பிடிக்க தோல் கொடுத்தனர்.
கௌரி சுகாதார அமைச்சிடமிருந்து பணிக் கடிதம் பெற காத்திருக்கிறார். பினாங்கு பொது மருத்துவமனை அவரது முதல் பணியிடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“நான் ஒரு டாக்டராக மட்டும் விரும்பவில்லை. எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்குச் சேவை செய்யவும், ஊக்கமளிக்கவும், வழிநடத்தவும் விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
கௌரியின் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புக்காக மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் பாராட்டினார்.
“அனைத்து தடைகளையும் தாண்டி, மன உறுதியுடன் டாக்டர் கனவை நனவாக்கினார். அவரின் வாழ்க்கைப் பயணம் பலருக்கு ஒரு உத்வேகமாக அமையும். பினாங்கு கேப்டன் 88 சமூக நல சங்கத்தின் திறன் மேம்பாடுத் திட்டத்தின் மூலம் பினாங்கு மற்றும் வடக்கு பிராந்திய மாணவர்கள் ஊக்கத்தொகை வழங்குவதைப் பாராட்டினார்.
எனவே, பினாங்கு கேப்டன் 88 சமூக நல சங்க போன்று பிற அரசு சாரா நிறுவனங்களும் மாநில அரசாங்கத்துடன் கைக்கோர்த்து மாணவர்களுக்கு உதவ முன் வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
“இதுவரை, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (USM), துங்கு அப்துல் ரஹ்மான் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (TAR UMT), UOW மலேசிய KDU பினாங்கு பல்கலைக்கழகக் கல்லூரி, ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் INTI அனைத்துலக கல்லூரி ஆகியவற்றிலிருந்து 27 மாணவர்களுக்கு ரிம1 மில்லியனுக்கும் அதிகமான உதவித்தொகைகளை வழங்கியுள்ளோம்” என்று 88 கேப்டன் சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ உய் ஹெங் ஹாக் கூறினார்.
மாநில முதலமைச்சர் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்த வருகையின் போது 88 கேப்டன் செயலாளர் டத்தோ ஜிம்மி ஓங் சின் கெங், சட்ட ஆலோசகர் பேராசிரியர் பாட்ரிசியா சுங் வெய் லெங் மற்றும் பினாங்கு கேர் தலைவரும் 88 கேப்டன் உறுப்பினருமான டாக்டர் ங்கோ சியோங் பூன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.