பினாங்கில் முதல் முறையாக எடிசன் திரை விருது விழா, கோலிவுட் வரவேற்பு – முதலமைச்சர்

Admin
img 20250517 wa0071

பாயான் லெப்பாஸ் – புகழ்பெற்ற எடிசன் திரை விருது விழா, முதல் முறையாக பினாங்கில் விமர்சையாக நடைபெற்றது. 17வது ஆண்டு விழாவிற்கு தலைமை உரையாற்றிய மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், தமிழ் சினிமா விருதளிப்பு விழாவை பினாங்கில் நடத்துவது பெருமைக்குரியது, என்றார்.

img 20250517 wa0079
பினாங்கு என்பது பண்பாட்டுச் சிறப்பு, கலாசார ஒற்றுமை மற்றும் வளர்ந்து வரும் படைப்பாற்றல் பொருளாதாரத்திற்குப் புகழ்பெற்ற தலமாகும். இத்தகைய மண்ணில், தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய விழா நடப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது,” என அவர் கூறினார்.

இந்த விழாவில் பங்கேற்க இந்தியாவிலிருந்து வந்த கலைஞர்கள், தொழில்துறை முன்னணியினர், மற்றும் பிரபலங்கள் குறிப்பாக கொலிவுட் சினிமாவின் உயிரோட்டம் பினாங்கை அலங்கரித்தது.
img 20250517 wa0062
“எடிசன் திரை விருது விழா என்பது தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நட்சத்திரங்களையும், உருவெடுக்கும் திறமைகளையும் கொண்டாடும் உயர்ந்த மேடையாக திகழ்கிறது.
இந்த எடிசன் விழாவானது, விஜய், தனுஷ், சிம்பு, விக்ரம், சிவகார்த்திகேயன், அனிருத் போன்றோருக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளது.” என முதலமைச்சர் மேலும் கூறினார்.

இந்த ஆண்டு விழாவின் சிறப்பம்சமாக ‘எடிசன் திரைப்பட விழா’ என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகைபடுத்தப்பட்ட திரைப்படங்களை திரையிடுவதன் மூலம், படைப்பாற்றலான கதை சொல்லலும் தொழில்நுட்ப மேன்மையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
img 20250517 wa0084
இத்தகைய நிகழ்ச்சிகள், பினாங்கு2030 என்ற மாநில இலக்கின் நோக்கங்களுடன் இணைகின்றன. பினாங்கு மாநிலத்தை கலை, கலாசாரம் மற்றும் புதுமைத் தொழில்நுட்பங்களுக்கான மையமாக மாற்ற இது ஒரு முக்கிய அம்சமாக திகழ்கிறது என முதலமைச்சர் தெரிவித்தார்.

“பினாங்கு தற்போது கொலிவுட்டை வரவேற்கின்றது. எதிர்காலத்தில் பாலிவுட்டையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
img 20250517 wa0052
விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த முதலமைச்சர், “உங்கள் படைப்புகள் மக்களை ஊக்குவிக்கும், பினாங்கு உங்கள் மேடையாகவும், வீடாகவும் இருக்கும்” என உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுலா மற்றும் படைப்பாக்கப் பொருளாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய், வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு, எடிசன் திரை விருது விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் செல்வக்குமார், கோலிவுட் திரைப்பட பிரபலங்களான சிம்ரன், குஷ்பு மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.