செபராங் ஜெயா – இந்த ஆண்டு பினாங்கு மாநில அளவில் கொண்டாடப்படும் அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் முன்னேற்றம், உரிமைகள் மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், பினாங்கு மாநில அரசு பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
“இந்த ஆண்டின் அனைத்துலக மகளிர் தினப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ‘Showcase @ IWD’ என்ற நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இதில் தொழில்நுட்பம், கலை, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன,” என்று சமூக மேம்பாடு, சமூகநலன் மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம் தெரிவித்தார்.
பினாங்கு மாநிலத்தில் உள்ள 40 மாநில சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, 2026 பிப்ரவரி,6 அன்று செயல்படுத்தப்பட்ட #BizIbuTunggal திட்டம், பெண்கள் குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் மிகவும் அர்த்தமுள்ள முன்னெடுப்புகளில் ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.
ஆதரவாளர்களையும் வாங்குபவர்களையும் இணைத்தல், வருமானம் ஈட்ட விரும்பும் தனித்துவாழும் தாய்மார்களை அடையாளம் காணுதல், மேலும் இலக்கு குழுக்களுக்கு பொருட்களை விநியோகித்தல் ஆகிய பொறுப்புகளை வகிக்கும் பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழு (JPWK) ஆதரவுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
“ஒரு பெண்ணுக்கு மீன் கொடுத்தால், அவளுக்கு ஒரு நாள் உணவாகும்; அதே ஒரு பெண்ணுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால், அவளுக்கும் அவளது குடும்பத்திற்கும் வாழ்நாள் முழுவதும் உணவாகும்” என்ற அணுகுமுறையை இந்த முன்னெடுப்பைச் செயல்படுத்துவதற்கான அடிப்படையாக நாங்கள் பின்பற்றுகிறோம்,” என்று அவர், செபராங் பிறை மாநகர் கழகத்தில் நடைபெற்ற பினாங்கு மாநில அளவிலான அனைத்துலக மகளிர் தினம் 2026 தொடக்க விழாவில் பேசும்போது கூறினார்.
இந்த நிகழ்ச்சியை, பினாங்கு மாநில ஆளுநரின் துணைவியார் மாண்புமிகு தோ புவான் ராஜா நூரா அஷிகின் ராஜா அப்துல்லா அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும், முதலமைச்சரின் துணைவியார் டான் லீன் கீ; எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ படேருல் அமின் அப்துல் ஹமீத்; எம்.பி.எஸ்.பி புஸ்பனிதா தலைவர் நொரைஷா ஹாஷிம்; பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் (PWDC) தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஓங் பீ லெங்; எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்கள், பினாங்கு மாநகர் மன்ற (எம்.பி.பி.பி) உறுப்பினர்கள் மற்றும் PWDC வாரியக் குழு உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநரான சியூ கிம், இந்தத் திட்டத்திற்கான ஆரம்ப இலக்கு ரிம100,000 ஆக நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆனால் பல்வேறு தரப்பினரின் வலுவான ஆதரவினால், மொத்த வசூல் ரிம144,274.50 என்ற மொத்த மதிப்புடன் இலக்கை வெற்றிகரமாகத் தாண்டியதாகவும் கூறினார்.
“மொத்தம் 347 ஆதரவாளர்களும் வாங்குபவர்களும் இதில் ஈடுபட்டதன் மூலம், 127 தனித்துவாழும் தாய்மார்கள் பயனடைந்தனர். சராசரியாக ஒவ்வொரு பங்கேற்பாளரும் சுமார் ரிம1,136 வருமானம் ஈட்டினர். மேலும், ஒரு தனித்துவாழும் தாய்மாது ஒரு மாதத்திற்கும் மேலாக ரிம9,600 வரை சம்பாதித்ததும் பதிவாகியுள்ளது,” என்று சுங்கை பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் லிம் கூறினார்.
“#BizIbuTunggal என்பது வெறும் விற்பனைத் தளம் மட்டுமல்ல, அது தனித்துவாழும் தாய்மார்கள் சுதந்திரமாக இருப்பதற்கும், வெற்றியை நோக்கித் தொடர்ந்து பாடுபடுவதற்கும் வாய்ப்புகளைத் திறக்கும் ஒரு அதிகாரமளிக்கும் முன்னெடுப்பு” என்றும் அவர் விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியில், பினாங்கு மாநிலத்தின் சமூக வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக, 16 மகளிர் அங்கீகரிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், ஓங் பீ லெங்கைச் சந்தித்தபோது, நோன்புப் பெருநாள் கேக் திட்ட முன்முயற்சியின் மூலம் #BizIbuTunggal திட்டத்தைச் செயல்படுத்தியது ஒரு முறை உதவியை வழங்கியது மட்டுமல்லாமல், இலக்குக் குழுவிற்கு ஒரு நிலையான வருமான ஆதாரத்தை உருவாக்குவதிலும் வெற்றி பெற்றது என்று தெரிவித்தார்.
அவரைப் பொறுத்தவரை, இத்திட்டத்தின் அணுகுமுறை, மகளிருக்கு, குறிப்பாக தனித்துவாழும் தாய்மார்களுக்கு, வருமானம் ஈட்டுவதற்கும் வணிகத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் நீண்டகால வளர்ச்சியை வலியுறுத்துகிறது என குறிப்பிட்டார்.
“பங்கேற்பை விரிவுபடுத்துவதுடன், நோன்புப் பெருநாள், கிறிஸ்துமஸ், தீபாவளி மற்றும் சீனப் புத்தாண்டு போன்ற பண்டிகைக் காலங்களுக்கு ஏற்ப இந்த முன்னெடுப்பை தொடர்ந்து மேற்கொள்ள PWDC திட்டமிட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பினாங்கு மாநிலத்தில் மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு தளமாக PWDC-யின் முயற்சிகளுக்கு எம்.பி.எஸ்.பி தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக மேயர் படெருல் அமின் தெரிவித்தார்.