ஜார்ச்டவுன் – மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் மாநில வருவாயை அதிகரித்து மேம்படுத்த ஒன்பது உத்திகளை முன்வைத்துள்ளார். 2030-ஆம் ஆண்டுக்குள் மேலும் ஐந்து ஆண்டுகள் காலத்திற்கு நிலம் மற்றும் சுரங்க அலுவலகம் (PTG) மூலம் ஆறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட உள்ளன.
“தொடர்புடைய நிறுவனங்கள் வரி அல்லாத வருவாய் உயர்த்த மேலும் மூன்று முன்முயற்சித் திட்டங்களை செயல்படுத்தினால், 2028ஆம் ஆண்டுக்குள் ரிம1 பில்லியன் இருப்பு சேமிப்பு இலக்கை அடைய முடியும்,” என்று நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் தெரிவித்தார்.
இந்த முன்முயற்சி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நில வரி மற்றும் மதிப்பீட்டு வருவாயை ஆண்டுக்கு ரிம140-145 மில்லியனிலிருந்து ரிம300-ரிம350 மில்லியனாக உயர்த்த பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், வரி அல்லாத வருவாய் (நிலக் கட்டணம், பரிவர்த்தனை கட்டணம், அனுமதி கட்டணம்) ஆண்டுக்கு ரிம300-400 மில்லியனிலிருந்து ரிம450 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த ஒருங்கிணைந்த செயல்திட்டம், 2028 ஆம் ஆண்டுக்குள் ரிம1 பில்லியன் இருப்பு இலக்கை எட்டுவதற்குப் பெரும் ஆதரவாக இருக்கும் என மாநில அரசு நம்பிக்கை கொள்வதாக,” 15-வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாவது தவனையின் இரண்டாவது கூட்டத்தில் தனது தொகுப்புரையை வழங்கும் போது இவ்வாறு கூறினார்.
வரி வருவாயை அதிகரிப்பதற்கான ஆறு நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு; அதே போல் மாநில அரசின் வரி அல்லாத வருவாயை மேம்படுத்துவதற்கான மூன்று முன்முயற்சி திட்டங்களும் இதில் அடங்கும்:-
* செலுத்தப்படாத வரி வசூல் மற்றும் நில பறிமுதல்;
* செலுத்தப்படாத வரி காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை ஏலம் விடுவதற்கான வழிகாட்டுதல்களைத் தயாரித்தல்;
* நில வரியைச் சரிப்பார்த்தல்
* நகர்ப்புற பகுதி அரசிதழ் உட்பட தற்போதுள்ள 10 நகரங்களின் விரிவாக்கம் மற்றும் 25 புதிய நகரங்களை உருவாக்குவதை உள்ளடக்கியது;
* பினாங்கு நில விதிகளின் பரிவர்த்தனை மற்றும் பரிவர்த்தனை அல்லாத கட்டணங்களை மதிப்பாய்வு செய்தல், இதில் தற்காலிக ஆக்கிரமிப்பு உரிமம் (TOL) கட்டண விகிதங்கள், உரிமை பிரீமியம் விகிதங்கள், குத்தகை கால நீட்டிப்பு மற்றும் பிற திருத்தங்கள் அடங்கும்; மற்றும்
* ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களுக்கு (ஆடம்பர அடுக்குமாடி, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள்) ஏற்ப புதிய விகிதங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு மதிப்பீட்டு வரி மதிப்பாய்வு.
“வரி அல்லாத வருவாய் மேம்பாட்டு முயற்சியானது, கோழிப் பண்ணை உரிமக் கட்டணங்களை அதிகரித்தல், பொதுப்பணித் துறை மற்றும் தாவரவியல் துறையின் சேவை வாடகை விகிதங்களை மதிப்பாய்வு செய்தல் மற்றும் தங்கும்விடுதி கட்டணங்களில் முன்மொழியப்பட்ட அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வருவாய் சேகரிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை உள்ளடக்கியது,” என்று பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினரும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் விளக்கமளித்தார்.
மாநில ஒருங்கிணைந்த நிதியில் ரிம1 பில்லியன் சேமிப்பு இலக்கை அடைவதோடு மட்டுமல்லாமல், அந்த இலக்கை நோக்கி முன்னேற்றத்தைக் கண்காணிக்க, கொன் இயோவ் நான்கு முக்கிய செயல்திறன் குறியீடுகளை (KPI) நிர்ணயித்துள்ளார்:
* மாநில வருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு குறைந்தது ஐந்து (5) முதல் ஏழு (7) சதவீதம் வரை அதிகரித்தல்
* உண்மையான வசூல் மதிப்பீட்டில் 95 சதவீதத்தை விட அதிகமாக்குதல்
* தற்போதைய நிதி நிலைமைக்கு ஏற்ப இருப்புக்களை விவேகத்துடன் நிர்வகித்தல்; மற்றும்
* திட்டமிடல் செயல்திறனை மேம்படுத்த திட்ட செயலாக்க முடிவுகளை கண்காணித்தல்.
கடந்த நவம்பர் 14 அன்று, மாநில முதலமைச்சர் 2026 ஆம் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட செலவினம் ரிம1,087,948,634 என்ற விநியோக மசோதா 2026-ஐ சட்டமன்றத்தில் சமர்ப்பித்தார்.
மேலும், முன்வைக்கப்பட்டுள்ள மேம்பாட்டு செலவின மதிப்பீடு மற்றும் மாநில வருவாய் மதிப்பீடு முறையே ரிம318,622,100 மற்றும் ரிம1,068,032,417 ஆகும்; திட்டமிடப்பட்ட நிதி பற்றாக்குறை ரிம19.92 மில்லியன் ஆகும், இது மாநில பற்றாக்குறை செலவின வரலாற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக அமைகிறது.