உலக இரத்த தானர் தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம்

Admin
img 20250616 wa0028

ஜுரு – அண்மையில், மலேசிய செத் ஜான் ஆம்புலன்ஸ் ஜுரு ஆட்டோ சிட்டி கொன்செப்ட் மண்டபத்தில் நடைபெற்ற இரத்த தான முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

உலக இரத்த தானர்களின் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மலேசிய செத் ஜான் ஆம்புலன்ஸ், வடக்கு மலேசியா இரத்த தான கழகம், மடானி மக்கள், பிறை மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் பிறை தொகுதி எம்.பி.கே.கே ஆகியவற்றின் ஒத்துழைப்பில் நடைபெற்றது.

இந்த இரத்த தான முகாமில் சன்வே மெடிக்கல் மருத்துவமனை மற்றும் புக்கிட் மெர்தாஜாம் பொது மருத்துவமனையும் இணைந்து பங்கேற்றன.

இந்நிகழ்ச்சியில் இரத்த தானத்துடன், இலவச இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை பரிசோதனைகள் போன்ற சுகாதார சேவைகளும் வழங்கப்பட்டன. அதோடு, வர்ணம் தீட்டும் போட்டி மற்றும் பொன்சாய் மர கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளும் பலரது கவனத்தை ஈர்த்தன.

 

img 20250616 wa0026

தாமான் இண்ராவாசே எம்.பி.கே.கே செயலாளர் ஜெரி லியோங், இத்தொகுதியில் அவ்வப்போது இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

“இந்த முன்முயற்சித் திட்டம், உள்ளூர் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பாளர்களை இரத்த தானத்தில் ஈடுபட ஊக்குவிப்பதே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றார் அவர்.

“இரத்த தானம் செய்வது பல உயிர்களை காப்பாற்றும் என்பதாலே, அடிக்கடி இத்திட்டத்தை முன்னெடுத்து ஊக்குவிக்கிறோம்.

“இத்திட்டத்தின் மூலம் இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்,” என்றார் ஜெரி லியோங்.

 

“இம்முறை நடைபெற்ற இரத்த தான முகாமில் 100 பை இரத்தம் சேகரிக்கப்பட்டது. இதுவரை கிடைத்த சிறந்த வரவேற்பால் நாங்கள் தொடர்ந்தும் இத்தகைய முகாம்களை நடத்தும் தீர்மானம் எடுத்துள்ளோம்,” என்று ஜெரி லியோங் முத்துச் செய்திகள் நாழிதழ் நிருபரிடம் தெரிவித்தார்.

இந்த இரத்த தான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதோடு, இளம் தலைமுறையினரின் ஆர்வம் சமூகத்தில் மனிதநேயத்தையும் ஒருமித்தியத்தையும் வளர்க்கும் விதமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

மருத்துவமனைகள், அவசர சிகிச்சை பிரிவுகள், அறுவை சிகிச்சை, புற்றுநோய் மற்றும் டெங்கி நோயாளிகள் உட்பட பலருக்கும் ரத்தம் என்பது அவசியமான உயிராதாரமாக அமைகிறது.

ஒரு ரத்த தானம் மூன்று உயிர்களுக்கு நம்பிக்கையையும், வாழ்வையும் அளிக்கக் கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இத்தகைய செயல், இரத்தக் குறைபாட்டால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு வாழ்வாதாரமாக அமைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.