உள்ளூர் வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உள்ளூர் அதிகாரிகள் வழிகாட்டியை செயல்படுத்துகின்றனர் – முதலமைச்சர்

Admin
img 20250721 wa0128

ஜார்ச்டவுன் – உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் (PBT) கீழ் தற்காலிக வணிக அனுமதிகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பான வழிகாட்டி, விண்ணப்பதாரர்கள் உள்ளூர் வணிகர்களாக இருக்க வேண்டும் என்பதை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பினாங்கில் உள்ளூர் வணிகர்களின் வணிக வளர்ச்சியைப் பாதுகாப்பதற்காக இந்த வழிகாட்டி செயல்படுத்தப்பட்டதாக மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.

இருப்பினும், அத்தகைய அனுமதிகளுக்கான விண்ணப்பங்கள் (தற்காலிக வணிகம்) குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது கட்டுப்படுத்தப்படும்.

“பண்டிகைக் காலங்களுக்கு அப்பாற்பட்டு ஏற்பாடு செய்யும் கார்னிவல், விற்பனை விழாக்கள் நடத்துவதற்கு மாநில அரசு மற்றும் ஊராட்சி மன்றங்கள் வெளியில் இருந்து வரும் எந்த வணிகர்களுக்கும் வியாபாரம் செய்வதற்குத் தடை விதிக்க மாட்டோம்.

“பினாங்கு மாநிலத்தை அற்ற வணிகர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் (உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் அனுமதித்த காலத்திற்குள்) இங்கு எந்த கார்னிவல் அல்லது வியாபார சந்தைகள் ஏற்று நடத்த விண்ணப்பிக்கலாம் மற்றும் ஏற்பாடு செய்யலாம்,” என்று அவர் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

அண்மையில், புக்கிட் மெர்தாஜாமில் நடைபெற்ற விற்பனை விழாவில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) அமலாக்க அதிகாரிகள் அபராத நோட்டீஸ்களை வழங்குவதைக் காட்டும் காட்சி டிக்டோக்கில் வைரலான ஒரு காணோளி குறித்த நிருபரின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக கொன் இயோவ் இவ்வாறு கூறினார்.

அந்தக் காணோளியில், வணிகர்கள் விதிகளை மீறுவதாகவும், அதாவது வர்த்தகர்கள் பினாங்கில் வசிப்பவர்கள் அல்ல என்றும், அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு வெளியே இந்திய கலாச்சாரம் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதாகவும் அமலாக்க அதிகாரியால் வர்த்தகர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், உள்ளூர் வர்த்தகர்களின் வணிகத்தைப் பாதிக்கும் வெளிநாட்டு வர்த்தகர்களின் வருகை தொடர்பாக, குறிப்பாக பண்டிகைக் காலத்தில், பினாங்கில் உள்ள இந்திய சங்கங்கள் மற்றும் மலேசிய இந்தியர் வர்த்தகம் மற்றும் தொழிலியல் சங்கம் பினாங்கு கிளை மூலமும் முன்னதாக, பல புகார்களையும் ஆட்சேபனைகளையும் பெற்றதாக விளக்கமளித்தார்.

“எனவே, கலாச்சார தொடர்பான விழா அல்லது கார்னிவல் ஏற்பாடு செய்வது பண்டிகைக் காலத்திற்கு வெளியே மட்டுமே அனுமதிக்கப்படும் வகையில் வழிகாட்டிகள் செயல்படுத்தப்பட்டன,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், எம்.பி.எஸ்.பி இன்று ஓர் ஊடக அறிக்கை மூலம், கொள்கையளவில், செபராங் பிறையில் உள்ள இந்தியச் சமூக விழாக்கள் உட்பட கலாச்சார விழாக்களுடன் இணைந்து விற்பனை விழாக்களை ஏற்பாடு செய்வதைத் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.

இந்த கார்னிவலில் பங்கேற்கும் பினாங்கிற்கு வெளியே இருந்து வரும் ஏற்பாட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் நுழைவைக் கட்டுப்படுத்த வழிகாட்டிகள் உள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து சமநிலையற்ற போட்டி குறித்து முன்னர் கவலை தெரிவித்த உள்ளூர் வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தையும் நலன்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.