பண்டைய காலங்களில் பொது மக்கள் தங்கள் காய்கறிகள் மற்றும் சமையல் பொருட்களைப் பல நாட்கள் வைத்திருப்பதற்கு மண்பானையே சிறந்த தேர்வாக அமைந்தது. ஆனால், தற்போதைய நவீன காலத்தில் குளிர்சாதனப் பெட்டிப் அதற்கு மாற்றுத் தேர்வாகப் பயன்படுத்தப்படுகிறது.
பினாங்கு இந்து சங்கத்தின் (PHA) துணைத் தலைவர் டாக்டர் எஸ்.பாலசுப்ரமணிம் கருத்துப்படி, மண் பானைகளைப் பயன்படுத்துவது தமிழர்களின் பாரம்பரிய முறையாகும். காய்கறிகளின் புத்துணர்ச்சியைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகித்த எளிமையான மற்றும் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களாக அக்காலத்தில் விளங்கியது.
மண் பானையில் காய்கறிகளை வைப்பதற்கு முன், முதலில் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றப்படும் என்று அவர் விளக்கினார்.
முதலில், மண் பானையில் தண்ணீர் ஊற்றப்பட்டு, அதன் உட்புறத்தை குளிர்விக்கப்படும். இது இயற்கையாக பானையின் உள்ளே இருக்கும் வெப்பநிலையைக் குறைத்து, அதிக ஈரப்பதமான சூழலை உருவாக்கும். இதன் மூலம், காய்கறிகள் வாடுவதற்கும் கெட்டுப்போவதும் தாமதமாக்கப்படும்.
“அலுமினியம் மற்றும் எஃகு வருவதற்கு முன்பே, மண் பானைகள் பயன்படுத்த பாதுகாப்பானவை. பண்டையக் காலங்களில், எங்கள் பெரும்பாலான சமையலுக்கு மண் பானைகளைப் பயன்படுத்தினோம்.
“மண் பானைகளைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் நவீன அடுப்புகளையும், ‘நான் ஸ்டிக்’ பாத்திரங்களையும் விரும்புகிறார்கள்,” என்று டாக்டர் பாலசுப்ரமணியம் கூறினார்.
இருப்பினும், மண் பானைகள் தயாரிக்கும் கலை இப்போது அழிந்து வரும் தொழிலாக மாறி வருவதாகவும், பாரிட் புந்தரில் ஒரு நிறுவனமும் சிலாங்கூரில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இன்னும் இந்தத் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
இந்தக் காரணத்திற்காக, PHA தலைவர் டத்தோ P. முருகையா, தனது சங்கம் ஜூலை,5 (சனிக்கிழமை) ஜார்ச்டவுன் உலக பாரம்பரியக் கொண்டாட்டத்துடன் இணைந்து மண் பாணை விழா: மட்பாண்ட வாழ்க்கையின் மறுமலர்ச்சியை ஊக்குவிக்கும் விழாவாக ஏற்று நடத்தியதாகக் கூறினார். இது ஜாலான் மஸ்ஜித் கபிதான் கெலிங்கில் உள்ள ‘சமையலறை’ எனும் பெயரிடப்பட்ட தற்காலிகக் கூடாரத்தில் நடைபெற்றது.
“ஜார்ச்டவுன் உலக பாரம்பரிய கொண்டாட்டத்தில் பினாங்கு இந்து சங்கம் மண் பானை விழாவை நடத்துவது இது இரண்டாவது முறையாகும். முதல் முறையாக 2017 இல் மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. இம்முறை மிதமான முறையில் நடத்தப்பட்டது,” என்று முருகையா முத்துச் செய்திகள் நாளிதழ் நேர்காணலின் போது கூறினார்.
PHA இன் கூடாரம் வருகையாளார்களின் தொடர்ச்சியான வருகையை ஈர்த்தது, அவர்களில் பலர் மட்பாண்டத் தயாரிப்பில் ஆர்வத்துடன் தங்கள் கைகளைக் கொண்டு முயற்சித்தனர். பாரிட் புந்தாரைச் சேர்ந்த கே.தேவராஜா மட்பாண்ட நிறுவனத்தின் மேலாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர் ரகுராஜ் தேவராஜ்,49 வழிகாட்டுதலின் கீழ், முதல் முறையாக பங்கேற்றவர்கள், மட்பாண்ட சக்கரம் தங்கள் விரல்களுக்குக் கீழே சுழலும் போது, மகிழ்ச்சியடைந்தனர்.
வருகையாளர்களுக்கு சிறிய மண் குவளைகளில் மசாலா தேநீரும் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்காக ஏறக்குறைய 1,500 சிறிய மண் குவளைகள் தயாரிக்கப்பட்டதாக டாக்டர் பாலசுப்பிரமணியம் பகிர்ந்து கொண்டார். தேநீரை ருசித்தப் பிறகு, வருகையாளர்கள் தங்கள் குவளைகளைக் கழுவிய பிறகு அவற்றின் மீது ஓவியம் வரைய அழைக்கப்பட்டனர் – இது குழந்தைகளிடையே மிகவும் பிரபலமான நடவடிக்கையாக அத்தினம் இடம்பெற்றது.
அந்தக் கூடாரத்தில் பல்வேறு அளவு மற்றும் வண்ணங்களில் மண் பானைகளின் வரிசையும் காட்சிப்படுத்தப்பட்டது. சில பாரம்பரியமாக மசாலா மற்றும் தானியங்களைச் சேமிக்கவும், மற்றவை சமையல் மற்றும் மத சடங்குகளுக்காகவும், இசை கருவிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

சமையலறை கூடாரம் நாள் முழுவதும், பாரம்பரிய மட்பாண்டங்களின் அழகை அனுபவிக்க ஆர்வமுள்ள உள்ளூர் மற்றும் அனைத்துலக சுற்றுப்பயணிகளை ஈர்த்தது. அத்தினத்தன்று பினாங்கு முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் ஹுய் யிங், ஜார்ச்டவுன் உலகப் பாரம்பரிய நிறுவன பொது மேலாளர் டாக்டர் ஆங் மிங் சீ, செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன், பினாங்கு மாநகர் கழக மேயர் டத்தோ இராஜேந்திரன் மற்றும் பல மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்குவர்.
பினாங்கில் இம்மாதிரியான கொண்டாட்டங்கள் மூலம் நவீன காலத்தில் பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.