ஜார்ச்டவுன் – ஒர் அரசு நிறுவனமாக செயல்படும் மாநில முதலமைச்சர் வாரியம் (CMI), தனியார் மற்றும் தொழில்முறை கூட்டாண்மை (4P) என்ற நோக்கத்தின் மூலம் நிலம் மற்றும் கட்டிடங்கள் போன்ற மாநில அரசின் மூலோபாய சொத்துக்களின் மதிப்பை அதிகப்படுத்துவதற்கான ஒரு வியூக அணுகுமுறையை செயல்படுத்தும் வாரியமாக செயல்படுகிறது.
பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், குத்தகைகள் மற்றும் தனியார் துறை ஒத்துழைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் CMI வாரியத்திற்கு வருமானம் ஈட்டப்படுகிறது என்று கூறினார்.
“தற்போது, 17 மாநில அரசு நிறுவனங்களின் (GLCs) நிதி ஒதுக்கீட்டைக் கண்காணிக்கும் பொறுப்பு CMI வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாவது தவணையின் முதல் கூட்டத்தில் தனது தொகுப்புரையில் இவ்வாறு விளக்கமளித்தார்.
நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், மாநில அரசின் நிதிச் சுமையைக் குறைக்க தனியார் துறை ஒத்துழைப்பு மூலம் திட்டங்களைச் செயல்படுத்துவதே தற்போது CMI இன் முக்கிய இலக்கு, என்றார்.
கூடுதலாக, மேம்ப்பாட்டுத் திட்டங்கள் 4P முறையில் செயல்படுத்துவதன் மூலம் நில வாடகை மற்றும் குத்தகை மூலம் CMI வருமானத்தை ஈட்ட அனுமதிக்கிறது என்றும் அவர் கூறினார்.
“2013 முதல் இதுவரை, சாண்டிலேண்ட் ஃபோர்ஷோர் வீட்டுவசதி திட்டம்; கம்போங் பிசாங் அவாக் வீட்டுவசதி திட்டம்; க்ராக் தங்கும்விடுதி மறுசீரமைப்புத் திட்டம்; பூப்பந்து அகாடமி மேம்பாடு; பிரிங்கி பே மேம்பாடு; பாயு செஞ்சா வளாகத்தின் மறுசீரமைப்புத் திட்டம், திதியான் சிலாரா வாழ்விடத் திட்டம், ஸ்டோனிஹர்ஸ்ட் அனைத்துலக பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் லாட் 642 பண்டார் குளுகோரின் கலப்பு மேம்பாடு போன்ற திட்டங்கள் மூலம் CMI மொத்தம் ரிம3.2 பில்லியன் முதலீடுகளை மாநில அரசுக்கு வெற்றிகரமாக கொண்டு வந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, பெராபிட் சட்டமன்ற உறுப்பினர் ஹெங் லீ லீ, பினாங்கின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதில் CMI இன் செயல்பாடு மற்றும் அதன் பங்கு குறித்து விளக்கம் கேட்டதற்கு முதலமைச்சர் சாவ் இவ்வாறு பதிலளித்தார்.