- பிறை – பிறை தொகுதியின் வரலாற்றில் முதல்முறையாக, சித்திரைப் புத்தாண்டு வருடப்பிறப்பு “தமிழ்ப் புத்தாண்டு திருவிழா” என்ற முழக்கத்துடன், பிறை சட்டமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில் அண்மையில் பிறை சாய் லெங் பார்க் பல்நோக்கு மண்டபத்தில் மிகுந்த உற்சாகத்துடன் வெற்றிகரமாக நடைபெற்றது.
- பிறை தொகுதியின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சுந்தராஜு கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய டத்தோ ஶ்ரீ சுந்தராஜு, தமிழ்ப் புத்தாண்டு தமிழர்களின் வண்ணமயமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் குடும்ப உறவை வலுப்படுத்தும் கொண்டாட்டமாகத் திகழ்கிறது, என்றார்.
“இந்த தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட பெருமளவில் வருகையளித்த பிறை தொகுதியின் இந்திய மக்களிடமிருந்து கிடைத்த மிகுந்த நேர்மறையான வரவேற்பைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கொண்டாட்டம் ஒற்றுமையின் வலிமையையும், நமது கலாச்சாரத்தைப் பாதுகாத்து பாராட்டும் மனப்பான்மையையும் நிரூபிக்கிறது.
“மொழி என்பது வெறும் வார்த்தை அல்ல. அது ஓர் இனத்தின் அடையாளம். நம் பண்பாட்டின் விழி. மொழியின்றி சிந்தனையில்லை, சிந்தனையின்றி மனிதன் இல்லை. மனிதனது பிறப்பாலும்⸴ மரபாலும் பின்னிப் பிணைந்த ஒரு பிரிக்க முடியாத அங்கமே தாய்மொழி ஆகும். ஒரு கலாச்சாரத்தைப் பற்றி கற்றுக்கொள்வதற்கான நுழைவாயிலே மொழியாகும். எனவே, அது இளம் வயதிலேயே விதைக்கப்பட்டு, வளர்க்கப்பட வேண்டும். சிறு வயது முதலே நம் பிள்ளைகளுக்கு நம் தாய்மொழியான தமிழ்மொழியின் சிறப்பையும், அதில் புதைந்து கிடக்கும் தமிழ் அறிஞர்களின் படைப்பையும் அறிமுகம் செய்வோம்”, என சுந்தராஜு தமதுரையில் வலியுறுத்தினார்.
இக்கொண்டாட்டத்தில் பாரம்பரிய தமிழ்க் கலாச்சார நிகழ்ச்சிளான தமிழ் தற்காப்புக் கலையான சிலம்பம்; பறை இசை மற்றும் புலி ஆட்டம், பழங்கால இசை கச்சேரி, கிராமிய மற்றும் கும்மி நடனம், கிராமப்புற தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் நாட்டுப்புற நடனங்கள் இடம்பெற்று வருகையாளர்களை கவர்ந்தது.
தமிழ்க் கலாச்சாரத்தில் பண்டிகைகள் மற்றும் புனித நிகழ்ச்சிகளின் சூழலுக்கு ஒத்த பாரம்பரிய இசையான நாதஸ்வரம், தவிழ் மற்றும் மங்கள இசை ஆகியவற்றின் ஒலிகளால் விழா மேலும் உற்சாகப்படுத்தப்பட்டது. கூடுதலாக, இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி மற்றும் தாயம் போன்ற அற்புதமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இவை மனதளவில் இன்றைய தலைமுறைகளை ஒன்றிணைக்கும் பாரம்பரிய தமிழ் விளையாட்டுகளாகும்.
இதனிடையே, அத்தினத்தன்று பாரம்பரிய தமிழ் உணவுக் கடைகள் ஒரு பிரபலமான ஈர்ப்பாக மாறியது. புத்தாண்டுடன் இணைந்து தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் சிற்றுண்டி முதல் பல்வேறு வகையான சுவையூட்டும் உணவுகள் வருகையாளர்களுக்கு பரிமாறப்பட்டது.
மொழி என்பது வார்த்தைகள் அல்ல, அது ஓர் இனத்தின் அடையாளம் – சுந்தராஜு
