கல்வியின் வழி மனித மூலதனத்தை உருவாக்குவோம் – முதல்வர்

பினாங்கு மாநில அரசின் கடனுதவிப் பெற்றுக் கொண்ட மாணவர்கள்

பினாங்கு மாநில கல்வி கடனுதவித் திட்டத்தில் 2016/2017-ஆம் ஆண்டு மேற்கல்வி தொடரும் மாணவர்களுக்கு தமது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
“ஆற்றல், பொறுப்பு, வெளிப்படை என்ற கொள்கையின் அடிப்படையில் மாநில அரசாங்கம் நிர்வாகம் நடத்தி 2008-ஆம் ஆண்டு தொடங்கி கூடுதல் வருமானம் ஈட்டுகிறது. இந்தக் கூடுதல் வருமானத்தைக் கொண்டு மாநில அரசு தகுதியுடைய மாணவர்களுக்கு மதம், இனம், அரசியல் பின்புலம் பாராமல் கல்விக் கடனுதவி வழங்கி வருகிறது”” .
“கல்வியின் மூலம் மனித மூலதனத்தை உருவாக்கும் மாநில அரசின் இலக்கு இதன் வழி செயல்படுத்தப்படுகிறது” என மாணவர் கடனுதவி ஒப்பந்த விழாவில் உரையாற்றினார் மாநில முதல்வர்.
இந்நிகழ்வில் மாநில இரண்டாம் துணை முதல்வரும் கல்வி ஆட்சிக்குழு உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி, மாநில துணை செயலாளர் டத்தோ காஜாலி டெராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் 311 மாணவர்கள் கடனுதவிப் பெற்றுக்கொண்டனர். 2008-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 13.9லட்சம் கடனுதவி வழங்கப்பட்டதாகவும் அதில் 1,543 மாணவர்கள் நன்மை அடைந்துள்ளனர் என்பது பாராட்டக்குறியது.
மேலும், இளங்கலை மட்டுமின்றி முதுகலை பட்டப் படிப்பிற்கும் மாநில அரசு கடனுதவி வழங்கி அங்கீகரிக்கிறது. சிறந்த தேர்ச்சி பெறும் அதாவது 3.67 மேல் தேர்வில் அடைவுநிலைப் பெறும் மாணவர்களுக்குக் கடனுதவி திட்டமானது ஊக்கத்தொகைக்கு மாற்றப்படும் என அறிவித்தார் முதல்வர்.}