இளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த விளையாட்டு சிறந்த தேர்வு

Admin

ஜார்ச்டவுன் – மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் தலைமையில் 11-வது முறையாக இந்திய இளைஞர் ஒற்றுமை போலிங் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

அண்மையில், பினாங்கு போலிங் மையத்தில் நடைபெற்ற இப்போட்டியினை உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர், ஜாய்ரில் கீர் ஜொஹாரி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இப்போட்டி இளைஞர்களிடையே ஒற்றுமையை பேணுவதோடு சுகாதாரமான வாழ்க்கை முறைக்கு வித்துடுகிறது, என ஆட்சிக்குழு உறுப்பினர், ஜாய்ரில் தெரிவித்தார்.

“இந்தப் போட்டியில் வயது, இனம், மற்றும் பாலினம் சாராமல் அனைவரும் பங்கேற்க ஊக்குவிக்கப்பட்டனர். இளைஞர்களிடையே நல்லிணக்கத்தைப் பேணுதலும் வலுப்படுத்துதலும் இப்போட்டியின் முக்கிய நோக்கமாக திகழ்கிறது,” என மலேசிய இந்து சங்க மாநிலத் துணைத் தலைவரும், புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் தலைவருமான விவேக நாயகன் திரு தர்மன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இளைஞர்களிடையே கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையில் போட்டியாளர்கள் பாரம்பரிய உடை அணிந்து விளையாட அனுமதிக்கப்பட்டனர். மேலும், சிறந்த பாரம்பரிய ஆடை அணிந்து விளையாடிய ஐந்து விளையாட்டாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது என தர்மன் தெரிவித்தார்.

11-வது முறையாக தொடர்ந்து புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை இளைஞர் பிரிவின் கீழ் நடைபெறும் இப்போட்டியில் இம்முறை 16 குழுக்களைப் பிரதிநிதித்து 80 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி வாரியக் குழுவின் பொருளாலர் திருமதி நிர்மலா; மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா பேரவையின் இளைஞர் பிரிவுத் தலைவர் திரு துஷாலன் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியின் வெற்றி மகுடத்தை ஹஞ்சுமம் அணியும், 2 வது இடத்தில் ஒஸ்ராம் அணியும், 3 வது இடத்தில் ஹார்ட் ராக் அணியும், வெற்றி பெற்று பரிசுகளைத் தட்டிச் சென்றனர். .
சிறந்த போலிங் பந்து வீச்சாளர் என்ற பட்டத்தையும் பரிசையும் ஆண்களுக்கான பிரிவில் ஒஸ்ராம் அணியைச் சேர்ந்த திரு கதிரவன், பெண்களுக்கான பிரவில் லியானா (இன்கிரிடி போல்ஸ் அல்க்ஸ் அணி) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.