கோவிட் -19ஐ எதிர்நோக்க அனைவரின் பங்களிப்பு அவசியம் – முதல்வர்

ஜார்ச்டவுன் – பினாங்கு வாழ் மக்கள் கோவிட் -19 நுண்ணுயிர் தொற்று நோயை எதிர்ப்பதில் சுகாதார அமைச்சின் அனைத்து உத்தரவுகளுக்கும் தங்கள் முழு உறுதிப்பாட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மார்ச் 18 முதல் 31-ஆம் நாள் வரை நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் (எம்.சி.ஓ) கீழ் வீட்டிலேயே தங்கியிருந்து முடிந்தவரை வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கொன் யாவ் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

“இம்மாநில முதல்வர் என்ற முறையில் அமைச்சும் மற்றும் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினும் கூறும் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றுவீர் என நம்புகிறேன். இந்நோய் உலகம் முழுவதும் பரவலாக பரவியுள்ள வேளையில் குறிப்பாக இத்தாலி நாட்டில் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

இந்த கோவிட் -19 நோயைச் சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது பங்களிப்பை வழங்க வேண்டும். தற்போது நாட்டில் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் நிலையைக் கண்டு சாதாரணமாக எண்ணக்கூடாது. இம்மாநில மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த மாநில அரசு தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

இந்த 14 நாட்களுக்கு மக்கள் வீட்டிலேயே இருங்கள், முடிந்த வரையில் வெளியில் செல்ல வேண்டாம், “என்று மாநில முதல்வர் சாவ் இன்று கொம்தாரில் கோவிட் -19-யின் கலந்துரையாடலின் போது இவ்வாறு பொதுமக்களை அறிவுறுத்தினார்.

இன்றைய காலை நேர நிலவரப்படி, நம் நாட்டில் 790 பேர் கோவிட்-19ல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30பேர் பினாங்கு மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே செய்தியாளர் சந்திப்பில் பேசிய உள்ளாட்சி, வீட்டமைப்பு, நகர மற்றும் கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ, பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மக்கள் நடமாட்டக் கட்டுபாட்டு உத்தரவைப் பின்பற்றுவதை உறுதிச்செய்ய ‘சிறப்புப் படை’ அதிகாரிகளைக் களத்தில் இறக்கியுள்ளது. இவர்கள் அனைத்து நேரங்களிலும் ரோந்து பணியில் ஈடுப்படுவர்.

“இந்த இரண்டு வார காலத்திற்கு மட்டும் பொதுமக்கள் அமைதியாக உத்தரவை பின்பற்றி வீட்டிலேயே இருங்கள், தயவுசெய்து இந்த காலக்கட்டத்தை பொறுத்து கொள்ளுங்கள்; இது மக்களின் நலனுக்காகவே”, என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் கேட்டுக் கொண்டார்.

தற்போதைய நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எம்.பி.பி.பி மற்றும் எம்.பி.எஸ்.பி ஊராட்சி மன்றங்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

சுமார் 50 பணியாளர்களைக் கொண்ட பினாங்கு மாநகர் கழக ‘சிறப்புப் படை’ தங்கள் கடமைகளைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

“இந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்கு எங்களுக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை, இதுபோன்ற காலகட்டத்தில் நாம் மந்தமாக இருக்க முடியாது.

தொடர்ந்து தீவுப்பகுதியில் அனைத்து கேளிக்கை மையம், பொழுது போக்கு பூங்கா மற்றும் இதர இடங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும். உத்தரவை மீறும் தரப்பினருக்கு ரிம1,000 அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்”, என டத்தோ பண்டார் டத்தோ இயூ துன் சியாங் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.